Mon. Nov 30th, 2020

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020 வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சனி விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு பெயர்ச்சியாகிறார்.

மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

கடந்த மூன்று ஆண்டுகளாக மேஷ ராசியினருக்கு தடைகள், தாமதம், எதிலும் அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தது. எட்டாம் இடத்தில் இருக்கும் அஷ்டம சனி மேஷ ராசியினருக்கு இப்பொழுது ஒன்பதாம் வீடான தனுசு ராசிக்கு வருகிறது.  முப்பது வயது  கடந்த மேஷ ராசியினருக்கு இந்த அஷ்டம சனி வாட்டி எடுத்துவிட்டது என்றே கூறலாம். இளம் வயதினருக்கு வேலை, வியாபாரம், தொழில் போன்றவற்றில் மந்த நிலை இருந்து வந்தது. ஒன்பதாம் வீட்டில் தனுசு ராசியில் வருவதால் இனி அனைத்திலும் நன்மை தான் ஏற்படும்.

பொதுப் பலன்கள்:

இப்பொழுது சனி பகவான் உங்கள் 3,6,11 வீட்டை பார்க்கின்றார். பதினோராம் வீடு சனியின் சொந்த வீடாக இருப்பதால் மேஷ ராசியினருக்கு நன்மை தான் செய்யும். இருக்கும் இடத்தை விட சனியின் பார்வைக்கு தான் பலம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. வாழ்க்கையில் மிக சிறப்பான நேரம் தொடங்கியது என்றே கூறலாம். அஷ்டம சனி விட்டு விலகுவதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியம், மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வேலை வாய்ப்பு, தொழில் இருந்து வந்த மந்த நிலை மாறும் நேரம் இது.

மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி போன விஷயங்கள் யாவும் இந்த பெயர்ச்சி மூலம் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க மேஷ ராசி தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. வீட்டில் யாரேனும் இருந்தால் போதும் அந்த வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

திருமண வயதில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கூட 2018-ல் திருமணம்  நடைபெற்று விடும். குழந்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்தி கிடைக்கும். வம்ச விருத்தி, வீடு, வாகனம் போன்றவை பெண்களுக்கு அமையும். மாமியார் மருமகள் உறவில் இதுவரை விரிசல் இருந்தது காணாமல் போகும். மனஸ்தாபங்கள் மறைந்து கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்துவீர்கள். குழந்தைகள் முன்னேற்றம், பொருளாதாரம், பணிபுரியும் இடத்தில் மரியாதை என்று அற்புதமாக அமையும் நேரமிது.

மாணவ/மாணவிகளுக்கானப் பலன்கள்:

இதுவரை இருந்த தேக்க மற்றும் மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருகி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கவன சிதறல், ஞாபக மறதி எல்லாம் இனி ஏற்படாது. உயர் கல்வி சேர்வது, கற்பதற்கு தேவையான  வசதி மற்றும் சூழல் ஏற்படும். மருத்தவ படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவ/மாணவிகள்  நல்ல மதிப்பெண்கள் அந்த தேர்வில் பெறுவார்கள். நல்ல நேரம் அமையும் பொழுது முயற்சி செய்தால் தான் வெற்றிக்கான பலன்களை காண இயலும்.

வேலை/வியாபாரம் செய்வர்களுக்கானப் பலன்கள்:

கடன் பிரச்சனை நீங்கி தொழிலை தொடர்ந்து நடத்துவது, நிலம் போன்றவற்றில் லாபம் உண்டாகும். இதுவரை உத்யோகத்தில் இருந்த தடைகள் மற்றும் தொல்லைகள் விடுபடும். உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அதிகாரம் செய்ய கூடிய பலம், விரும்பிய வேலை மாற்றம் எல்லாம் அமைய போகிறது. எட்டாம் இடத்து சனி நீங்கள் முயற்சி செய்து நடைபெறாமல் இருந்ததே அந்த காரியம் அனைத்தும் நடைபெறும்.

டிரேடிங் செய்பவர்களுக்கு லாபம் ஏற்பட கூடும். பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி செய்பவர்களுக்கு, சிறு தொழிற்சாலை  செய்பவர்கள் மீண்டும் தொழிலை ஆர்வத்துடன் செய்ய தொடங்குவீர்கள். உள்நாட்டு வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர்கள் கடல் கடந்து தங்கள் தொழிலை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி மேஷ ராசியின் பதினோராம் இடத்தை பார்ப்பதால் எதிலும் லாபம் பார்க்கும் நேரம் என்றே கூறலாம். இதனை சரியாக மூன்றாண்டு காலங்களில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பரிகாரம்:

மூன்றாண்டு படாதபாடு படுத்திய சனி பகவானை திருநள்ளாறுக்கு சென்று வழிபடலாம். இந்த தலத்தில் இருக்கும் மரகத லிங்கத்தை ஒரு பெட்டியில் வெளியில் எடுத்து அபிஷேகம் செய்த பிறகு அந்த பெட்டிக்குள் வைத்து விடுவார்கள். அந்த அபிஷேகத்தை காண வேண்டும். மேஷ ராசினர் தர்பாரண்யேஸ்வரை வழிபட வேண்டும்.

ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

ரிஷப ராசியினருக்கு ஏழாம் வீட்டில் இருந்த சனி பகவான் இப்பொழுது எட்டாம் வீடான தனுசு ராசிக்கு வருகின்றார். எட்டாம் வீடான தனுசில் வரும் சனி ரிஷப ராசியினருக்கு நன்மை அல்லது தீய பலன்களை தர போகிறாரா என்பதை பார்க்கலாம். ரிஷப ராசியினருக்கு நன்மை செய்யும் முதன்மை கிரகமாக சனி பகவான் திகழ்கின்றார். துலாம், ரிஷபம் ராசியினருக்கு சனி பகவான் தீமை செய்ய மாட்டார். அது போல சுக்ரன் சனி வீடான மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு நன்மைகள் செய்வார்கள்.

ஜன காலத்தின் படி நல்ல தசை புக்தி இருந்தால் சனியின் தொல்லை இருக்காது. குரு, சுக்கிரன், புதன் தசை நடைபெற்று இருந்தால் இந்த அஷ்டம சனி இவர்களை பெரிதும் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

பொதுப் பலன்கள்:

தனுசு ராசி குரு வீடு என்பதால் சனி பகவான் இந்த பெயர்ச்சில் பெரிதாக பாதிப்புகள் உண்டாக்கமாட்டார். ரிஷப ராசியினர் அமைதியாக இருப்பதால் பெரிதும் பாதிப்புகள் ஏற்படாது. தண்டனைகள் தரக்கூடியவர் சனி பகவான் என்றாலும் ரிஷப ராசியினர் மீது அவர்க்கு ஒரு மென்மையான போக்கு இருக்கும். மற்ற ராசியினருக்கு நடக்கின்ற கேடுகள் ரிஷப ராசியினருக்கு ஏற்படாது.

அஷ்டம சனி காலங்களில் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீண் செலவுகள், முதலீடு, புதிய முயற்சி தவிர்ப்பது நல்லது. இந்த அஷ்டம சனி முப்பது வயது இருப்பவர்களை படாத பாடு படுத்தி விடும். திருமணம், வேலை, தொழில் என்று அனைத்திலும் இடையூறுகளை சனி பகவான் கொடுப்பார்.

ஏழாம் இடத்தில் குரு பகவான் வரும் பொழுது திருமணம் செய்து கொள்ளலாம். அக்டோபர்  முதல் செப்டம்பர்  வரை குரு விருட்சிக ராசிக்கு வரும்.  அஷ்டம சனி முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.

பெண்களுக்கானப் பலன்கள்:

அஷ்டம சனி தொடங்குவதால் பெண்கள் நகைகள் இரவலாக கொடுப்பது, பொருட்களை கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொருள் சேதம், பண சேதம் என்று இருக்கும். தேவையில்லாத செலவுகள் இருந்து கொண்டே இருக்கும்.  கணவர் வீட்டாருடன் கருத்து வேறுபாடு வரக்கூடும் என்பதால் அமைதியாக செயல்படுவது நன்மை தரும்.

இக்காலகட்டத்தில் எந்த வித பிரதிபலனை எதிர்பார்க்காமல் உங்கள் கடமையை செய்து கொண்டு இருக்க வேண்டும்.  பொருளாதாரம் நெருக்கடி, உறவினர்களுடன் மனக்கசப்பு, வேலைப்பளு, சம்பளம் உயர்வதில் தடை என்று இருக்கும். ஆரோக்கியம் மற்றும் வரவு, செலவுகளை நீங்கள் அவ்வப்பொழுது கவனித்து கொண்டு இருக்க வேண்டும்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

சிறுதொழில் முனைவோருக்கு இந்த அஷ்டம சனி பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாது. லாபத்தில் சற்று குறைவு ஏற்படும். பண விஷயத்தில் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்கள் பணம் திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும்.  அவசரப்பட்டு வேறு வேலை சேர்வது என்று இருந்தால், இருக்கும் வேலையும் போய்விடும். வேலை தொடர்பாக இடம் மாற்றம், வெளியூர் சென்று பிரிந்து வாழ நேரிடும்.

வியாபாரிகளுக்கு சிறப்பாக பண வரவு இருந்தாலும் லாபம் சற்று குறைவாக தான் இருக்கும். தொழில் தொடர்பான பண பரிவர்த்தனை நேரிடையாக செய்ய வேண்டும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களிடம் கொடுத்தால் அந்த பணம் திரும்ப வராது.

மாணவ/மாணவிகளுக்கானப் பலன்கள்:

கல்வி பயிலும் இடத்தில் நீங்கள் விரும்பிய கல்லூரியில் சேர முடியாமல் போகலாம்.  உங்கள் உடன் படிக்கும் மாணவர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் தண்டனை வாங்குவீர்கள். மாணவர்களிடம் பழகுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். கல்வியை மட்டும் சிந்தனையில் வைத்து கொண்டு மற்ற கணினி, தொலைபேசி, விளையாட்டில் கவனத்தை சிதற விடாமல் இருங்கள். படிப்பில் ஆர்வம் குறையும், தேவையில்லாமல் வேடிக்கை, கேளிக்கை, ஈடுபாடு இல்லாமல் போகும். முடிந்தவரை அதில் இருந்து குழந்தைகளை தவிர்த்து நல்ல படிப்பில் கவனத்தை செலுத்தும் வகையில் கவனித்து கொள்ளுங்கள்.

பரிகாரம்:

சுக்ரன் வீடான ரிஷபத்தில் பிறந்தவர்கள் சனி கிழமையில் பெருமாள் வழிபாடு நன்மை தரும் விதமாக இருக்கும்.

மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

மிதுன ராசியினருக்கு ஆறாம் இடத்தில் இருந்த சனி இப்போது ஏழாம் இடத்திற்கு செல்கிறார். இதுவரை ஆறாம் இடத்து சனி உங்களுக்கு எதிரிகளிடம் இருந்து விடுதலை மற்றும் யோகமான இடமாக இருந்தது. இப்பொழுது ஏழாம் இடத்திற்கு வருவது  சிறப்பான அமைப்பு இல்லை என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாம் இடமான கும்பத்தை சனி மூன்றாம் பார்வையாக பார்ப்பதால் நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் என்றே கூறலாம். ஏழாம் இடத்து சனியை கண்டச்சனி என்பார்கள், ஏழாம் பார்வையாக மிதுன ராசியை பார்ப்பது சிறப்பான அமைப்பு என்று கூற முடியாது.

பொதுப் பலன்கள்:

மிதுன ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி ஏற்பட கூடிய மாற்றங்கள் அனைத்திலும் நன்மை தரும் விதமாக இருக்கும். உடல் மெலிவு, மருத்தவ பரிசோதனை மற்றும் செலவுகள் ஏற்பட கூடும். மூன்றாண்டுகள் ஏழாம் இடத்தில் இருப்பதால் சுமாரான பலன்கள் தான் மிதுன ராசிக்கு கொடுக்கும். பூர்விக சொத்துகள், உறவினருடன் இருந்த மனக்கசப்பு எல்லாம் ஒரு தீர்வுக்கு வரும்.

முதல் வருடம் குரு உங்கள் ராசியை பார்ப்பதால் இந்த சனியின் பார்வை கெடுதல் பலன்களில் இருந்து விடுபடலாம். மற்ற இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு சனியின் பார்வை ராசியின் மீது படுவதால் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும் மற்றும் வாழ்க்கை பாடத்தை கற்று கொடுக்கும்.

மிதுன ராசியினர் தாயாரின் உடல் நிலையில் அக்கறையுடன் இருங்கள். அவர்களின் உடல் நலத்தில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை விரைந்து அணுகுவதே சால சிறந்தது. நீண்ட நாட்கள் தடைபட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டுக்குள் நடைபெற்று விடும். ஏற்கனவே முதல் திருமணம் ஏற்பட்ட பிரிவு இரண்டாவது திருமணம் சீராக அமையும். உங்களுக்கு பணவரவு மற்றும் பொருளாதாரம் நன்றாகவே இந்த சனி பெயர்ச்சியில் இருக்கும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில்  கெட்டிமேளம் கொட்டுகின்ற நேரம் இது. குழந்தை எதிர்பார்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரும். கணவர் வீட்டாருடன் நெருக்கம் உண்டாகும், சண்டை சச்சரவு ஏதேனும் இருந்தால் சரியாகி விடும்.

மாணவ/மாணவிகளுக்கானப் பலன்கள்:

புதன் கல்விக்கான அதிபதி என்பதால் மிதுனம் வீடாக இருப்பதால் இவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். சிறிது முயற்சி செய்தால் உயர் கல்வி நீங்கள் நினைத்தபடி உங்களுக்கு அமையும். இந்த சனிப்பெயர்ச்சியில் வியக்க வைக்கும் அளவிற்கு உங்கள் கல்வி முன்னேற்றம் இருக்கும். அனைவரும் பார்க்கும் விதமாக, பாராட்டக்கூடிய விதமாக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கடினமான பாடத்தை சுலபமாக படித்து, அதில் அதிக மதிப்பெண்களை வாங்குவீர்கள்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

தொழிலை விரிவு படுத்துவது, மாற்றி அமைப்பது போன்றவற்றை இந்த சனி பெயர்ச்சி படுத்தி விடும். சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல நேரம் என்றே கூறலாம். பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் டிரேடிங், ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் லாபம் பல மடங்கு வரும். புதிய பார்ட்னர் கிடைக்கும், அவர்களால் முதலீடு செய்து தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

கல்வி சம்பந்தமான பொருட்கள், விற்பனை செய்வது ஏற்ற தொழிலாக அமையும். சிலர் பேச்சு தொழிலில் இருப்பார்கள், கால் சென்டர், மார்க்கெட்டிங், நிதி, பேங்க் போன்றவற்றில் இவர்களால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரம்:

சிதம்பரம் நடராஜரை திருவாதிரை நட்சத்திரம் அன்று மிதுன ராசியினர் வழிபடலாம்.  ஓவ்வொரு மாதமும் அந்த நட்சத்திரம் நடராஜரை தரிசித்தால் நன்மை உண்டாகும். சனி பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புகள் இருந்து விடுபடலாம்.

கடகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

கடக ராசியினருக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த சனி இப்பொழுது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாத நிலை, குழந்தைகளால் மன வருத்தம், அலைச்சல் இருந்த நிலை மாற போகிறது. சனி மாற்றத்தினால் கடந்த மூன்றாண்டு காலங்களில் இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள், சங்கடங்கள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.

பொதுப் பலன்கள்:

கடக ராசிக்கு கடன், கொடுக்கல் வாங்கல் இருந்த சிக்கல் இப்பொழுது ஒரு முடிவுக்கு வரும். சட்ட சிக்கலில் இருந்து விடுபட்டு உங்களுக்கு சாதகமான முடிவு அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை, ஒற்றுமை, அமைதி காணப்படும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

கடக ராசி பெண்களுக்கு சனி பெயர்ச்சி நன்மையே அதிகம் அளவில் நடைபெறும். கணவன் மனைவி உறவு மேம்படும். குழந்தை வரன் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். உங்களை புரிந்து கொள்ளாத கணவர், உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் பெண்களுக்கு நல்ல வரன் அமைகின்ற நேரம் இது. பூசம், புனர்பூசம் பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல், சண்டை எல்லாம் சுமுகமாக முடிவடையும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது, பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவது என்று இருப்பீர்கள். ஆடை, ஆபரணம், வெள்ளி வாங்கி மகிழும் நேரம் இது. பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் மற்றும் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். உங்கள் வீட்டில் திருமண வயதில் ஆண் அல்லது பெண் பிள்ளை இருந்தால் மனதிற்கு பிடித்தார் போல் மணவாழ்க்கை அமையும்.

மாணவ/மாணவிக்கானப் பலன்கள்:

இதுவரை புரியாத புதிராக இருந்த பாடம் உங்களுக்கு எளிதாக புரிந்து படிக்கும் விதத்தில் இருக்கும். வரவிருக்கும் பொது தேர்வில் படிப்பில் ஆர்வம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். முயற்சி செய்தால் தான் மதிப்பெண்கள் எல்லாம் கிடைக்கும், ஆசை பட்ட கல்லூரி மற்றும் படிப்பு அமையும். எனக்கு எதுவும் நடக்க வில்லை என்று புலம்பி கொண்டு இருந்தால் எதுவும் நடைபெறாது. முயற்சி செய்தால் இந்த சனி பெயர்ச்சியில் தங்கு தடையின்றி உயர் கல்வி சேர்வது நிறைவேறும்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கான பலன்கள்:

உங்கள் வங்கி கணக்கில் பணம் வைப்பு ஏறப்போகிறது. அது எப்படி என்று தோன்றினால் உத்தியோகம், வேலை சம்பள உயர்வு, பதவி, பட்டம் மூலம் கிடைக்கும். சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் மிக பெரிய வளர்ச்சியை பார்ப்பார்கள். ஒரு சிலருக்கு இரண்டு தொழில் செய்யும் வாய்ப்பு கிட்டும். உங்களுக்கு தேவையான வண்டி மாற்றுவது, வாகனத்தை சரி செய்வது என்று இருப்பீர்கள். ஐந்தாம் இடத்தில் இருந்து சனி பகவான் ஆறாம் இடத்தில் செல்வதால் எதிர்பாராதவிதமாக நன்மைகள் நடக்கும்.

வெளியூர் வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி அமையும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்வபவர்கள், தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும்.

பரிகாரம்:

கடக ராசியினர் நவக்கிரக சந்தநிதி இல்லாத சிவன் கோவிலில் சனி கிழமையில் வழிபாடு செய்யலாம். சிவபெருமானை மற்றும் அம்பாளை அர்ச்சனை செய்து சனிக்கிழமையன்று தரிசிப்பது நன்மை தரும்.

சிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் அக்டோபர் 26, 3.25 மாலை பெயர்ச்சியாகின்றார். சிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு வருகின்றார். எட்டாம் இடத்தில் இருக்கும் சனியை அஷ்டம சனி என்று கூறுவார்கள். அதில் பாதி நான்காம் இடத்தில் இருக்கும் அர்த்தாஷ்டம சனி என்று அழைப்பார்கள்.  அஷ்டம சனி போல உங்களுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்தன. சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபடலாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சனி தனுசு ராசியில் இருக்க போகின்றார். அவர் சிம்ம ராசியினருக்கு என்ன பலன்கள் கொடுக்க போகின்றார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பொதுப் பலன்கள்:

சிம்மத்திற்கு ஆறாம் மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதியாக சனி பகவான் இருப்பதால் பின் வீடான தனுசு இருப்பதால் நன்மைகள் அதிகளவில் நடைபெறும். சிம்ம ராசிக்கு தீமைகள் எதவும் நடக்காது என்றாலும் அவர்களின் ஜாதக அமைப்பின் படி தான் நன்மைகள் ஏற்படக்கூடும். தனுசில் இருக்கும் சனி பகவான்  மூன்றாம் பார்வையாக கும்பத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனம், பத்தாம் வீட்டின் பார்வை கன்னி ராசியை பார்க்கின்றார்.

சிம்மத்திற்கு  இரண்டாம் வீடான கன்னியை பார்ப்பதால்  வருமானத்தை சுருங்க வைப்பார். இந்த மூன்றாண்டு சனி பெயர்ச்சியில் இரண்டு குரு பெயர்ச்சியும் ஒரு ராகு கேது பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. சிம்ம ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மை மட்டுமே செய்யும் என்பதில் எவ்வித ஐயம் இல்லை என்றே கூறலாம்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு பொறுப்புகள், புதிய வேலை அமையலாம். தங்கு தடையின்றி அனைத்தும் நடைபெறும், எதிரிகள், இதுவரை தொல்லை கொடுப்பவர்கள் விலகி செல்வார்கள்.

குரு சனியோடு சேரும் காலத்தில் உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சனியின் பார்வை உங்கள் ராசியில் இருந்து விடுபடுவதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து , நல்ல சிந்திக்கும் ஆற்றலை பெறுவீர்கள். நீங்கள் இதுவரை மன அழுத்தம், மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு இருந்தால் அதில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

இதுவரை செய்து வரும் தொழில் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் மற்றும் கொடி கட்டி பறக்கும் நேரம் இது. உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் தொழில் மற்றும் வருமானம் இருக்கும். தொழிலை விரிவு படுத்துவது, இருக்கும் இடத்தை விட்டு பெரிய இடத்திற்கு அலுவலகம் மாற்றுவது என்று இருப்பீர்கள்.

உடல் நிலை:

அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட உடல் உபாதைகள் இனி சரியாகிவிடும். இதுவரை மருத்தவ செலவுகள் இருந்தே கொண்டே இருக்கிறதே என்று புலம்பி கொண்டு இருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுபடலாம். சிம்ம ராசியினருக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும். செவ்வாய் வீடான விருச்சிகத்தில் இருந்து மன அழுத்தத்தை சனி கொடுத்தார். இப்பொழுது அதில் இருந்து விடுபடுவீர்கள்.

பெண்களுக்கானப் பலன்கள்:

பெண்களுக்கு நல்ல பெயர், பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகளை குடும்பத்தில் ஏற்றுக் கொள்வார்கள்.  திருமணம் வயதில் இருக்கும் பெண்களுக்கு நிச்சயம் ஆகி விடும். டூம் டூம் மேளம் சத்தம் ஒலிக்க போகின்ற நேரம் இது. கணவர் வீட்டாருடன் உறவுகள் நெருக்கம் உண்டாகும். பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடத்தில் வேலை அமையும்.

தங்க நகை வாங்குவது, ஆடை ஆபரணம் சேர்ப்பது, வெள்ளி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையும் நேரம் இது.

மாணவ/மாணவிக்கானப் பலன்கள்:

சிம்ம ராசியினர் படிப்பு விஷயத்தில் கெட்டிக்காரராக இருப்பார்கள். அவர்களுக்கு புதன் வீடான கன்னி ராசி இரண்டாம் இடமாக இருப்பதால் நல்ல கலைகளில், படிப்பில் ஆர்வம் இருக்கும். அர்த்தாஷ்டம சனி முடிவடைந்து ஐந்தாம் வீட்டிற்கு வருவதால் புத்திகூர்மை, படிப்பில் கவனம், அதிக மதிப்பெண்ணும் பெறுவார்கள். விரும்பிய படிப்பு  மற்றும் கல்லூரியில் சேரும் அமைப்பு இருக்கும்.

பரிகாரம்:

சனிப்பெயர்ச்சி ஆகின்ற நாட்களில் அண்ணாமலையாரை வணங்குவது நன்மை தரும். அன்று கிரிவலம் செய்தால் சிம்ம ராசியினருக்கு பல பலன்கள் கிடைக்கும். பிரதோஷ நாட்கள், சனிக்கிழமை போன்ற நாட்களில் சிவபெருமான் மற்றும் அம்பாளை வணங்குவதால் தங்கு தடைகள் இன்றி நினைத்த காரியம் நடந்து வெற்றி அடைவீர்கள்.

கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

கன்னி ராசியினருக்கு சனி பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்தில் வருகிறார். இது அர்த்தாஷ்டம சனி என்பார்கள். நான்கில் வரும் சனி அலைச்சல், வீண் விரயம், ஆரோக்கியம், தொழில்களில் பாதிப்புகள் ஏற்படுத்தும். குரு வீடான தனுசு ராசியில் சனி இருக்கும் பொழுது நான்காம் இடத்திற்கு உரிய பலன்கள் கன்னி ராசியினருக்கு கிடைக்காது. கன்னியில் குரு இருக்கும் பொழுது தன லாபத்தை தருகிறார், மேலும் பதினோராம் இடத்து ராகு உயர்வான நிலைக்கு தள்ளுவார்.

பொதுப் பலன்கள்:

உங்கள் ஆரோக்கியம், தொழில் போன்றவற்றில் அவ்வப்பொழுது பாதிப்புகள் ஏற்படுத்துவார். நான்காம் இடத்து சனி ஜீவன அமைப்பை பார்ப்பதால் தொழிலில், வேலை, வியாபாரத்தை கெடுப்பார். குரு பார்வை ஜீவன அமைப்பில் இருக்கும் பொழுது பெரிதும் பாதிப்புகள் ஏற்படாது. கோட்சர பலன்களை வைத்து உறுதியாக இது நடைபெறும் என்று கூறமுடியாது. ஜாதகருக்கு நல்ல தசை நடந்தால் விதி விலக்கு உண்டாகும். சனியின் பார்வை ராசியில் படுவதால் முரண்பாடான குணங்கள் இருக்கும். பல நாட்கள் சேர்த்து வைத்த நல்ல பெயர் உங்கள் செயல்களினால் கெட்டுவிடும்.

வயதான தாயாரை கவனித்து கொள்ளுங்கள், அவரின் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள். பெற்றோர்கள் மனவருத்தம் படும்படி பேசவோ அல்லது செயல்களையே செய்யாதீர்கள். குரு உங்கள் பத்தாம் வீடு மிதுனத்தில் இருக்கும் பொழுது தொழிலில் எவ்வித பாதிப்புகளும் இருக்காது. ஆனாலும் சனி பெயர்ச்சி மூன்று ஆண்டுகள் ஆயிற்றே செப்டம்பர்  2018 பிறகு நீங்கள் தொழில் மற்றும் வேலையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி வரும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி கரமாக இருக்கும் .திருமணம் முயற்சி செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் தேவையான  பொருட்களை வாங்குவீர்கள், செலவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் விரும்பிய கல்லூரி அமையும். வீட்டில் உறவினர் வருகை மகிழ்ச்சி உண்டாக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். பணம் கொடுப்பதில் உஷாராக இருக்க வேண்டும். அர்த்தாஷ்டம சனி காலத்தில் பணம் திரும்ப கேட்டால் வராது. பொருட்களை அதிகமாக வாங்க தூண்டும் என்பதால் தேவையான பொருட்கள் மீது செலவு செய்து கொள்ளுங்கள்.வீண் செலவுகள், கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

மாணவ/மாணவிக்கானப் பலன்கள்:

உயர் கல்வி வாய்ப்புகள், பேச்சு போட்டிகள்,  படிப்பில் மட்டும் இல்லாமல் மற்றவற்றில் கலந்து கொண்டு பரிசுகள் பெறுவீர்கள். முதல் மற்றும் அடுத்த இரண்டு இடங்களில் நீங்கள் இல்லை என்றாலும் ஆறுதல் பரிசாக பட்டம் பெறுகின்றீர்கள் அல்லவா அதுவே பரிசு தான். கன்னி ராசியில் பிறந்த மாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி காண்பார்கள்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

புதிய வேலை தேடுபவர்கள், தொழில் தொடங்குபவர், அயல் நாட்டிற்கு செல்ல முயற்சி செய்பவர்கள் தவிர்க்க வேண்டும். பணம் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இந்த கால கட்டத்தில் கடன்களை கொடுக்க நிறைய பேர் இருப்பார்கள், புதிய கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள். வியாபாரம் சிறப்பாக தான் இருக்கும் குரு பார்வை உங்கள் பத்தாம் வீடான மிதுனத்தில் ஒன்பதாம் பார்வையாக விழுகிறது. ராகு பதினோராம் இடத்தில் இருப்பதால் நினைத்தபடி லாபம் இருக்கும். ஒரு சிலருக்கு வருமானம் ஒரே மாதிரி இருக்காது , ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுவார்கள். வேலை மாற்றம், வேறு டிபார்ட்மென்ட் மாறுவது, ஊர் மாற்றம் இந்த சனி பெயர்ச்சியில் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சிறுதொழில் செய்பவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். நான்காம் இடத்தில் சனி வரும் பொழுது பெரும்பாலும் பலரும் பணம் விஷயத்தில் ஏமாந்து போவார்கள். இருப்பதை வைத்து கொண்டு திருப்தியாக வாழ வேண்டும். மேலும் முதலீடு செய்வது இக்காலகட்டத்தில் நஷ்டத்தை உண்டாக்கும்.

பரிகாரம்:

கன்னி ராசியின் மீது சனியின் பார்வை பெறுவதால் சற்று முன்கோபம், சந்தேகம் குணம் கொண்டு அனைவரையும் பகைத்து கொள்வீர்கள். உங்கள் ராசி புதன் ஆதிக்கம் உள்ள வீடு என்பதால் சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமையில் திருப்பதி பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நல்ல படியாக முடிவடையும்.

துலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

துலாம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்த சனி பகவான் மூன்றாம் வீட்டிற்கு வருகின்றார். சாதாரணமாக மூன்றாமிடத்து சனி நன்மை செய்தாலும் துலாம் ராசிக்கு இது யோக காலம் என்றே கூறலாம்.

ஏழரைச்சனியின் முடிவடையும் பொழுது ஏதேனும் உங்கள் வயதிற்கு ஏற்றார் போல் நன்மை செய்து விட்டு போகும்.

துலாம் ராசியினருக்கு சனி மூன்றாம் பார்வையாக ஐந்தாம் வீட்டை பார்க்கின்றார், ஏழாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீதும், பத்தாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் விழுகின்றது.

பொதுப் பலன்கள்:

துலாம் ராசியினர் அவர் அவரின் வயது கேற்ப ஏழரைச் சனியின் பாதிப்புகளில் முழுமையாக விடுதலை அடைகின்றீர்கள். இளம் பருவத்தினருக்கு 2009 காலத்தில் இருந்து சனி பகவான் வேலை, தொழில், திருமணம், கல்வியில் தடை என்று இருந்து கொண்டே இருந்தது. சனியின் தாக்கத்தினால் 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் பின்னடைவு அடைய நேரிட்டது. சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருப்பவர்கள் மட்டுமே ஏழரை சனியில் இருந்து விடுபட்டார்கள்.

துலாம் ராசியினர் ஒரு புதிய மனிதராக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை விலகும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பம், உடல் நிலை எல்லாம் சரியாகும் காலம் இது. நீங்கள் சிறு முயற்சி செய்தால் பெரிய அளவில் லாபம் பார்க்கும் காலம் இது. இந்த பொன்னான காலத்தை சரியாக பயன்படுத்தி நல்ல விதத்தில் முதலீடு செய்யுங்கள். நிலம் மற்றும் உங்கள் வங்கியில் சேர்த்து வைத்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கானப் பலன்கள்:

தங்கள் மனதிற்கு ஏற்றது போல் கணவர் அமைவார்.  இந்த சனி பெயர்ச்சி மூலம் துலாம் ராசியினருக்கு தடைபட்டு கொண்டு இருந்த திருமணம் நடைபெற்று விடும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகிவிடும். துலாம் ராசியினர்  வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு தான் நடக்க வேண்டும் இல்லை உடன் பிறந்தவர்களுக்கு கூட நடைபெறலாம். ஆடை, ஆபரணம், பொருள் சேர்க்கை அமையும் காலம் இது. அனைவரும் உங்களிடம் அன்பு மழை பொழிவார்கள்.

குடும்ப வாழ்க்கை:

குடும்பத்தில் இதுவரை எந்த சுப காரியங்கள் நடைபெறவில்லை என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு சனி பெயர்ச்சியின் மூலம் நடைபெற்று விடும்.

மாணவ/மாணவிகளுக்கானப் பலன்கள்:

துலாம் ராசி மாணவ மாணவியருக்கு இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி சேரும் வாய்ப்பு இருக்கிறது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். நல்ல மதிப்பெண்கள், விரும்பிய கல்லூரி, உயர் கல்வி, வெளியூர் சென்று மேல் படிப்பு என அனைத்தும் நடைபெறும்.

ஆசிரியர் உங்களை பாராட்டும் விதமாக நடந்து கொள்வீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். கை எழுத்து நன்றாக இருக்கும். விடைகள் சரியாக இருக்கும். நான்கு பதில்கள் கொடுத்தாலும் சரியான பதிலை தேர்வு செய்தால் தான் மதிப்பெண் கிடைக்கும்.  உங்கள் வெற்றி, பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவிகள் மற்றும் சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கலாம். புதிய வேலை முயற்சி செய்தவர்களுக்கு நல்ல மனதிற்கு ஏற்றார் போல் வேலை அமைந்து விடும். தொழிலில் இருந்து வந்த சிக்கல் விலகி முன்னேற்றதிற்கான பாதையில் செல்வீர்கள். ஒரு சிலருக்கு மாத மாதம் நிரந்தர வருமானம் வரும் காலம் இது. கூட்டுத்தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதுவரை கிடைக்காத வேலை, பதவி உயர்வு மற்றும் சம்பளம் எல்லாம் கிடைக்கும் நேரம் என்றே கூறலாம்.  இந்த சனி பெயர்ச்சி துலாம் ராசிக்கு தொட்டது துலங்கும் நேரமாக அமைகிறது. முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு வளமான வாழ்க்கை காத்துக் கொண்டு இருக்கிறது.

பரிகாரம்:

துலாம் ஏழரைச்சனி பரிபூர்ணமாக விலகுவதால் சிவன் மற்றும் அம்பாள் வழிபாடு செய்வது நன்மை தரும். நீங்கள் சனி பகவானை விலகுகின்ற நேரத்தில் அவரை வழிபட கூடாது. ஈஸ்வரனை துணையாருடன் இருக்கும் ஸ்தலத்திற்கு சென்று பிரதோஷம் மற்றும் சனிக்கிழமையில் வழிபடலாம்.

விருச்சிகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

வாழ்க்கையில் தடுமாறி கொண்டு இருந்த விருச்சிகம் ராசிக்கு அக்டோபர் 2017 நடைபெறும் சனி பெயர்ச்சி உங்கள் துன்பத்தை போக்கும். பல சோதனைகள், உடல் நிலை பாதிப்புகள், மன வேதனைகள், மன உளைச்சல் சனி பெயர்ச்சி உங்களுக்கு தந்து விட்டார். உங்கள் குடும்பத்தில் யாரேனும் இருந்தால் அவர்கள் படும் துன்பத்தை சொல்ல அளவில்லை என்றே கூறலாம்.

ஜென்ம சனி இப்பொழுது உங்கள் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் சோதனைகள் எதவும் நடைபெறாது என்றே கூறலாம். முப்பது வயதை கடந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பாத சனியாக இருப்பதால் பாதிப்புகள் குறைவாக தான் இருக்கும். மூன்று ஆண்டுகள் பிறகு தான் முழுமையாக விருச்சிகம் ராசியினருக்கு ஏழரை சனி முடிவடையும்.

பொதுப் பலன்கள்:

ஜென்மச் சனியின் தாக்கம் உங்களுக்கு தூக்கமின்மை , நெருங்கிய உறவினர்கள் இழப்பு, வேலையில் மாற்றம், வேலை பறிகொடுத்தல் போன்றவற்றை ஏற்படுத்தியிருக்கும். நாற்பது வயதை தாண்டிய விருச்சிக ராசியினருக்கு அவர்களின் துன்பங்களை பட்டியல் தான் போட வேண்டி இருக்கும். விருச்சிகம் ராசியை விட்டு சனி தனுசுக்கு நகர்வதால் நன்மைகள் தானாகவே நடைபெறும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் யாவும் ஒரு தீர்வுக்கு வரும். பண விஷயத்தில் யாரேனும் நீங்கள் ஏமாந்தால் அல்லது கொடுக்காமல் இழுத்து கொண்டு இருந்தால் ஒரு முடிவுக்கு வந்தடையும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். மகிழ்ச்சி, ஆனந்தம் அடையும் நேரமாக இருக்கிறது. திருமண வயதில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் நேரம் இது. வருகின்ற 2018 ஆண்டுக்குள் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். கடன் பாக்கியெல்லாம் அடைத்து விடுவீர்கள். புகுந்த வீட்டாருடன் ஒற்றுமை நிலவும். வெளியூர் வேலை செய்து கொண்டு இருந்தால் இனி வேலை மாற்றம் கிடைத்து திரும்ப சேர்ந்துவிடுவார்கள். பிறந்த வீட்டில் உங்களுக்கு பூர்விக சொத்துகள் கிடைக்க சற்று தாமதமாகும். மூன்றாண்டு காலங்களில் பாத சனி முடிந்த பிறகு அதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

மாணவ/மாணவிக்கானப் பலன்கள்:

உடலில் ஏற்பட்ட சோர்வு, விரக்தி, படிப்பில் கவனம் சிதறல் முழுமையாக விலகிவிடும். இனி மனத்தெளிவுடன், உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதால் படிப்பில் நாட்டம் இருக்கும். சக மாணவர்களிடமிருந்து வந்த சண்டை, சச்சரவு எல்லாம் மறைந்து இனி உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இதுவரை உங்களின் உடல் ஒத்துழைக்காமல் படாத படுத்தி கொண்டு இருந்த நிலை மாறி உற்சாகமாக கல்வி பயிலும் ஆர்வம் இருக்கும்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

சிறுதொழில் செய்பவர்களுக்கு அன்றாடம் பணவரவு இருக்கும். வட்டி வாங்கும் நிலை மாறும். உங்கள் கடனை அடைத்து விடுவீர்கள். உங்கள் வருமானத்தை உயர்த்த சிறிய மாற்றங்களை செய்து முன்னேற்றம்  அடைவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு பணம் ரொட்டேஷன் இருந்து கொண்டே இருக்கும். தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொல்லை கொடுத்து கொண்டிருந்த அதிகாரிகள் விலகிவிடுவார்கள்.

பரிகாரம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய்க்கு வழிபாடு செய்யலாம். நவக்கிரக ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நோய்கள் நொடிகளின்றி இருக்கலாம்.

தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

தனுசு ராசிக்கு சனி ஜென்ம சனியாக வருகின்றார். விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்வதால் பலன்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். அக்டோபர் 26 தேதி மாலை 3.25 சனி பெயர்ச்சி ஆகிறார். நாற்பது வயதை கடந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பொங்கு சனியாக வருவதால் பாதிப்புகள் ஏற்படாமல் நன்மை தான் விளையும். ஜென்ம சனி என்பது வாழக்கையில் பாடத்தை கற்று கொடுக்கும். தனுசு, மீனம் ஆகியவை குரு வீடு என்பதால் அங்கு அமரும் சனி கெடுதல்கள் அவ்வளவு செய்யமாட்டார்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் சனியின் பலத்தை வைத்து தான் அவர்களுக்கு தீமை நடக்குமா அல்லது நன்மை ஏற்படுமா என்று அறிய முடியும். தனுசு ராசியில் பிறந்த அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படாது.

பொதுப் பலன்கள்:

ஜென்ம சனியின் பாதிப்புகள் உங்களுக்கு 2018 ஆண்டில்  தான் தெரிய ஆரம்பிக்கும். சனி பெயர்ச்சியில் தான் திருமணம், வீடு கட்டுவது, வேலை புதிதாக தொடங்குவது அல்லது தொழில் செய்வது என்று இருக்கும். இதுவரை உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றாமல் இருந்திருக்கும் ஆனால் சனி பகவான் உங்களை தூண்டி பாடத்தை கற்று கொடுத்துவிடுவார். இக்காலகட்டத்தில் பொறுமையாக, நிதானமாக, யோசித்த பின் செயல்பட வேண்டும்.

தனுசு ராசியினர் உழைப்பில் என்றும் சோம்பல் ஆகாமல் சுறுசுறுப்புடன் செயல்படுவதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களுக்கு யாரை நம்புவது, நம்பக்கூடாது என்ற குழப்பம் வரும். சில நேரங்களில் அவர்களின் சிக்கல், வீண் பிரச்சனைகளில் மாட்டி கொள்வீர்கள். கடன்களை அடைத்து விடுங்கள், புதிய கடன்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மட்டுமே கடனை வாங்குங்கள்.

பெண்களுக்கானப் பலன்கள்:

திருமணத்திற்காக காத்திருக்கும் தனுசு ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சியில் திருமணம் நடந்துவிடும். தனுசு ராசி இளம் கன்னிகளுக்கு தாலி ஏறும் நேரம் இது. புத்திரபாக்கியம் எதிர் பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்துக்கொண்டு இருக்கிறது. திடீர் செலவுகள், பயணங்கள், ஆடை, ஆபரணம் சேர்க்கை மற்றும் வேலை சுமை என்று இருக்கும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி விடுவீர்கள். அதனை யோசித்து திட்டமிட்டு செயல் படுவது நன்மை தரும்.

சந்தேக விதையை சனி விதைத்து விடுவார். குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம்பட்டு சண்டை, மனஸ்தாபங்கள் என்று இருக்கும். குடும்பத்தில் மூன்றாம் நபரை சேர்க்காமல் இருவர் மட்டும் பேசிக் கொண்டால் பிரச்சனை தீர்ந்து விடும்.

மாணவ/மாணவிகளுக்கானப் பலன்கள்:

தனுசு ராசி மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் சிதறும். வாட்ஸாப், வலை தளங்கள் போன்றவற்றை தள்ளி வைத்துவிடுங்கள். வீண் அரட்டை, கெட்ட நண்பர்களின் சேர்க்கை வைத்து வம்புகளில் சிக்குவது என்று இருப்பீர்கள். அதனால் பெற்றவர்கள் பிள்ளைகளின் மேல் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு படிப்புக்கு தேவையானவற்றை வாங்கி தந்து ஊக்கப்படுத்திப் படிக்க வையுங்கள். சோம்பல், எந்த காரியத்தை செய்தாலும் வெறுப்பு, நிதானம் இல்லாமல் செய்வார்கள். தட்டி கொடுத்து அவர்களை நல்வழியில் பெற்றவர்கள் கொண்டு வர வேண்டும்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

தொழில், வேலை, சுய தொழில் செய்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக காணப்படும், குறைந்த லாபம் அல்லது நிலையான வருமானம் இல்லாத நிலை என்று இருக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். உங்களுக்கு பிடிக்காதவர்கள் கை ஓங்கும் நிலை, மேலதிகாரிகள் உங்கள் வேலையில் ஏதேனும் குறை அல்லது திருப்பதி அளிக்கவில்லை என்று கூற நேரும். நீங்கள் வீண் அரட்டை, மேல் அதிகாரியை பற்றி புறம் பேசுவது என்று இல்லாமல் நிதானமாக பொறுமையுடன் கையாள வேண்டும்.

உங்களின் திறமைகளை அறிய மாட்டார்கள், சரியான வேலை கிடைக்காமல் சோம்பேறித்தனம் ஏற்படும். பிற்காலத்தில் இந்த மங்கு சனி வேலை, தொழில் போன்ற அமைப்பில் மங்க வைத்து விடுவார். தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுங்கள், கிடைக்கின்ற சம்பளம்

குறைவான ஊதியம் என்றாலும் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள். சிறிது காலம் அனுபவம் பெற்று வேறு நிறுவனத்திற்கு மாறலாம்.

பரிகாரம்:

தனுசு  ராசியின் மீது சனி வருவதால்  ஸ்ரீ காளஹஸ்தி ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். நீங்கள் இதற்கு முன் சென்றிருந்தாலும் இப்பொழுது நடக்கும் சனி பெயர்ச்சியில் ஓரளவுக்கு விடுபடலாம்.

மகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

அக்டோபர் 26 தேதி 2018 ஆண்டில் சனி பெயர்ச்சி மகர ராசியினருக்கு ஆரம்பம் ஆகின்றது. ஏழரை சனி என்றால் பன்னிரண்டு ராசியினருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் உண்டாகும் என்று கூற முடியாது. விருச்சிக ராசிக்கு வீடான செவ்வாய்யில் சனி அமர்ந்து படாதபாடு படுத்தி இருப்பார். நண்பர்களின் வீடான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் போன்ற ராசியினருக்கு சனி குறைந்த பாதிப்புகள் கொடுத்திருப்பார். மகரம் ராசி சனியின் சொந்த வீடாகும் என்பதால் கெடுபலன்களை கொடுக்க மாட்டார்.

பொதுப் பலன்கள்:

மகர ராசியினருக்கு முதல் சுற்று சனி வந்தாலும் இரண்டாம் சுற்று வந்தாலும் பாதிப்புகள் பெரிதும் ஏற்படாது. இரண்டாவது சனி சுற்று வரும் பொழுது நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வியாபாரத்தை வளர்ச்சி செய்வது, விரிவாக்கம் என்று இருப்பார்கள். மற்றவர்களை நம்பாமல் தானே செயல்படுவது நன்மை தரும். ஒரு சிலருக்கு இதுவரை இல்லாத சோம்பல் ஏற்படும். பிடிப்பு இல்லாமல் மற்றும் பற்று இல்லாமல் இருப்பார்கள். பெற்றவர்கள் அவர்களை நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும். அரவணைப்பு, பாராட்டுவது என்று இருந்தால் குழந்தைகள் உற்சாகம் ஏற்பட்டு அந்த செயலில் மேலும் ஈடுபாடுடன் செயல்படுவார்கள்.

புதிய வீடு குடியேறுவது, வாங்குவது, வாகனம் வாங்கும் யோகம் அமையும். திருமணம் பாக்கியம், குழந்தை பாக்கியம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

பெண்களுக்கானப் பலன்கள்:

நீங்கள் தாய் அல்லது பாட்டி ஆகும் பாக்கியம் கிட்டும். தங்கம் வாங்குவது, ஆடை, ஆபரணம், பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்க வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் நன்றாக தான் இருக்கும். எதிர்பார்க்கின்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடம் மாற்றம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்கள் லாபம் அடைந்து மகிழ்வீர்கள்.

எவரையும் நம்பி யாரையும் பற்றி பேசாமல் இருப்பது நலம் தரும். ஒரு சில பெண்களுக்கு அலுவலகத்தில் வேலை சுமை அதிகம் காணப்பட்டால் வீட்டிலும் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும். குடும்ப நபர்களை பற்றி விமர்சிப்பது மற்றும் குறை கண்டுபிடிப்பது என்று இல்லாமல் நிதானத்தை கடை பிடியுங்கள்.

மாணவ/மாணவிக்கானப் பலன்கள்:

உங்களிடம் சண்டை அல்லது பேசாதவர்கள் கூட நண்பர்கள் ஆகிவிடுவார்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் என்பதால்  நல்ல மதிப்பெண்களை பெறலாம். இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி உயர் கல்வி சேர்வது மற்றும் விரும்பிய பாடம் தேர்வு செய்வது என்று இருப்பீர்கள். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

மகர ராசியினருக்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சியில் தொழிலில் வளர்ச்சி கிடைக்கும். தடைகள், நஷ்டங்கள் மற்றும் தாமதங்கள் எல்லாம் தீரும். இடையூறு இல்லாமல் உங்கள் தொழிலை செய்யலாம். வியாபாரம் சிறப்பாக அமையும் நேரம் என்றே கூறலாம். தொழிற்சாலையில் புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, தொழில் துவங்குவது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி , புதிய கிளைகள் தொடங்குவது என்று இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு தொழிலில் வளர்ச்சி உண்டாகும். இந்த அபார வளர்ச்சி உங்கள் சுய ஜாதகத்தை வைத்தே நடைபெறும்.

பரிகாரம்:

மகர ராசியினருக்கு ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும். உங்கள் வீட்டின் அருகே இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வர தங்கு, தடைகள் இன்றி நினைத்த காரியம் வெற்றி அளிக்கும். அவரின் சுலோகம், பாடல்கள் சொல்லி கொண்டு வழிபாடு செய்யலாம். ஏழரை சனி உங்களுக்கு ஆரம்பமாக போவதால் ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும். அனுமனை வழிபட்டால் ஏழரை சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

கும்பம் ராசியினருக்கு பத்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் இப்பொழுது அக்டோபர் 26 தேதி 2017 ஆம் ஆண்டு தனுசு ராசியில் பதினோராம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசியின் அதிபதி சனி பகவான் உங்கள் ராசி மீது மூன்றாம் பார்வையாக விழுவதால் நன்மை தான் செய்வார். சனியை போல கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்றாலும் உங்களை பொறுத்தவரை அவர் எவ்வித தடையும்  செய்யமாட்டார். சனி பகவான் மற்ற வீடுகளை விட 3,6,11 வீடுகளில் தான் அதிகம் நன்மை தருவார்.

பொதுப் பலன்கள் :

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த பதினோராம் இடத்து சனி இப்பொழுது கும்ப ராசியினருக்கு வருவதால் நன்மையே செய்வார். கும்ப ராசியின் மீது குரு பார்வை மற்றும் சனி பார்வை விழுவதால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெற்று விடும். மூன்று ஆண்டுகளுக்கு தனுசு ராசியில் சனி பகவான் இருப்பதால் கும்ப ராசியினர் அதிக அளவில் முன்னேற்றம் காண்பார்கள். அவரவரின் வயதில் நடைபெறும் நல்ல விஷயங்கள் யாவும் நடைபெறும் நேரமாக இருக்கிறது.

இதுவரை உங்கள் மனதில் ஏற்பட்ட குழப்பம், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாத நிலை, உடல் நிலை உபாதைகள் எல்லாம் இப்பொழுது தீர்ந்து விடும். தெளிவான பாதைக்கான வழியை தேர்ந்து எடுப்பீர்கள். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பணவரவு இருப்பதால் உங்கள் கடனில் இருந்து விடுபடுவீர்கள். வீடு கட்ட முடியாமல் பணம் இல்லாமல் இருந்தவர்களுக்கு வீடு கட்டி முடிக்கும் அளவிற்கு எவ்வித வழியிலாவது பணம் வந்து சேரும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

நீண்ட காலமாக ஒரு முடிவுக்கு வராத பூர்விக சொத்துகள் மற்றும் குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு  கிடைக்கும். உங்கள் வார்த்தை மற்றும் சபையில் பேசும் கருத்துக்களை அனைவரும் ஏற்று கொள்வார்கள். பதினோராம் இடத்தில் சனி பகவான் வரும் பொழுது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்.

கும்ப ராசி பெண்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகிறது என்றே கூறலாம். உங்களுக்கு பட்டம், பதவிகள், சம்பள உயர்வு மற்றும் பாராட்டு கிடைக்கும். திறமை எல்லாம் வெளிக்கொண்டு கொடி கட்டி பறக்கும் நேரம் இது. இதுவரை ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மற்றும் மருத்தவ சிகிச்சை செய்தவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் அடைவார்கள்.

மாணவ/மாணவிக்கானப் பலன்கள்:

படிப்பில் நாட்டம் இல்லாத மாணவ மாணவியர்களுக்கு கூட ஆர்வம் உண்டாகும். சிலர் போட்டிகள், விளையாட்டு, மற்ற கலைகளிலும் கலந்து கொண்டு பரிசு வாங்குவார்கள். சனி உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவார் என்பதால் போட்டி, விளையாட்டு போன்றவற்றில் சேர்ந்து கொள்ளுங்கள். முதல் பரிசு வாங்காவிட்டாலும் உங்களை பற்றி அறியும் திறன் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சியில் உங்கள் வலிமை என்னவென்று அறிந்து கொள்வீர்கள்.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

கும்ப ராசியினருக்கு இதுவரை இடையூறாக இருந்தவர்கள் மற்றும் பிரச்சனைகள் எல்லாம் இப்பொழுது காணாமல் போய்விடும். லாப ஸ்தானத்தில் சனி வருவதால் தொழிலில் வளர்ச்சி, உத்யோகம் பார்ப்பவருக்கு பதவி, தலைமை பொறுப்பு, சம்பள உயர்வு என்று இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட கூடும். இக்காலகட்டத்தில் சிறிது முயற்சி செய்தால் நீங்கள் நல்ல பலன்களை எதிர்ப் பார்க்கலாம்.

புதிதாக ஆரம்பித்த தொழிலிலிருந்து நல்ல வருமானம் வரும். ஒரு சிலருக்கு ஒரு வேலை ஒரு தொழில் என்று இல்லாமல் இரண்டு அல்லது பல தொழில்கள் செய்யும் ஆர்வம் உண்டாகும். எண்ணியபடியே அவ்வாறே அமைந்து விடும். வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி, சிறு தொழில் முனைவோர்கள் மற்றும் அனைத்து தரப்பு  கும்ப ராசியினருக்கு மாற்றம் உண்டாகும்.

மந்த நிலையில் இருந்த தொழில் இப்பொழுது சூடு பிடிக்க தொடங்கும். புதிதாக வாடிக்கையாளரின் தேவைகளை புரிந்து அப்பொருள்களை விற்பனை செய்து லாபத்தை பெருக்கி கொள்ளலாம்.

பரிகாரம்:

கும்ப ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சிக்கு எந்தப் பரிகாரமும் தேவையில்லை. வெளிய செல்லும் போதும், புதிய காரியம் செய்யும் பொழுதும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கினால் போதும்.

மீனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:

சனி பகவான் இதுவரை மீனம் ராசியினருக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து சாதகமற்ற பலன்களை தந்தார். இப்பொழுது பத்தாம் வீட்டில் தனுசு வீட்டிற்கு வருவதால் நன்மைகள் தருவார். சனி பகவான் செவ்வாய் வீட்டில் அமர்ந்து உள்ளதால் கெடுபலன்களை கொடுத்து வந்தார். உங்கள் நான்காம் வீட்டை, பத்தாம் வீட்டை, மற்றும் பன்னிரண்டாம் வீட்டை சனி பார்க்கின்றார். நல்ல விஷயம் எதவும் நடைபெறாமல் குரு மற்றும் ராகு செய்வார்கள்.

பொதுப் பலன்கள் :

மீனம் ராசியினருக்கு செலவுகள் அதிகம் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். வேண்டிய செலவுகள் மட்டும் செய்யுங்கள் ஆடம்பர பொருட்களின் மீது வீண் செலவுகள் வேண்டாம். ஒரு சிலர் கவுரவத்திற்க்காக செலவுகள் செய்வார்கள். பொதுவாக மீனம் ராசியினருக்கு மற்றவர்கள் அதிகளவில் இவர்களுக்கு செய்வார்கள். இதுவரை உங்களை வாட்டி எடுத்த கடன் தொல்லை, உடல் நிலை, தொழில் பிரச்சனைகள் யாவும் ஒரு தீர்வுக்கு வரும்.

புதிய தொழிலை தொடங்குவது அல்லது மாற்றங்கள் செய்து பார்ப்பது எதிர்பார்த்த பலனை தராது. பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றில் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யாவும் கை கொடுக்கும். விசா எடுப்பது, வெளியூர் வேலை, வெளியூர் மேல்படிப்பு  எல்லாம் சாதகமாக அமையும்.

பெண்களுக்கானப் பலன்கள்:

பெண்கள் இதுவரை கணவரிடம் இருந்த பிரிவினை, சொத்து பிரச்சனை, இடம் மாற்றம் எல்லாம் சரியாகி விடும். மீனம் ராசி பெண்கள் இதுவரை எதிர்மறையாக இருந்தது சாதகமாக மாறும் நிலை இருக்கிறது. திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு, நல்ல மனதிற்கு பிடித்த மணவாளன் அமைந்து கெட்டி மேளம் கொட்டுகின்ற நேரமாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அடுத்து அடுத்து நடைபெறும். விலையுயர்ந்த புத்தாடைகள், நகை, பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறந்த வீட்டாருக்கும் புகுந்த வீட்டாருக்கும் இணக்கம் ஏற்படும். இதுவரை நடந்த சண்டை, சச்சரவுகள் எல்லாம் வீட்டு விஷேஷம் மூலம் சரி செய்து கொள்வீர்கள்.

மாணவ/மாணவிகளுக்கானப் பலன்கள்:

பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்றும் இருக்கும் மாணவர்கள் கூட கல்வியில் நாட்டம் அதிகரித்து மதிப்பெண்கள் கூடும். பெற்றவர்களை ஆச்சிரியம் செய்யும்படி உங்கள் கல்வியில் மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிக்காட்டி அனைவரையும் ஆச்சிரியம் செய்யும் படி இருப்பீர்கள். நுழைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று விருப்பம் போல நல்ல கல்லூரி அமையும். அரசு சார்ந்த தேர்வுகள் மற்றும் வங்கி தேர்வுகளில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும் நேரமாக இருக்கிறது.

வேலை/வியாபாரம் செய்பவர்களுக்கானப் பலன்கள்:

வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும், கடன் கொடுப்பதை முடிந்த அளவில் தடுக்கப் பாருங்கள். சுய தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் போன்றவற்றை பிடிப்பீர்கள். மீனம் ராசியினர் இந்த சனி பெயர்ச்சியில் கருப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழிலால் லாபம் அடைவீர்கள். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் வேலை மாற்றத்தினால் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்:

மீனம் ராசியில் பிறந்தவர்கள் சனி பெயர்ச்சி பரிகாரமாக வீட்டில் தானம் கொடுக்காமல் வெளியில் சென்று தானம் தரலாம். ஊனமுற்றவர்கள், துப்பரவு தொழில் செய்பவர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்த அளவிற்கு தானம் கொடுக்கலாம்.

share

By Editor

error: Alert: Content is protected !!