International
மலேசியா

சட்டவிரோத அன்னிய தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக்குக! – சபா முதல்வர்

கெனிங்காவ், ஜன.12- சட்டவிரோதமாக வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ தொழிலாளர்கள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் அறிவுறுத்தினார்.

நாட்டை வழிநடத்துவதற்கு ஏற்ற அறிவார்ந்த முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். உணர்ச்சிகளின் அடிப்படையில் அம்முடிவுகள் எடுக்கப் படக் கூடாது என்று அவர் சொன்னார்.

அந்நிய தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ தொழிலாளர்கள் அந்தஸ்து வழங்கப் பட வேண்டும் என்று அம்மாநில நிர்வாகம் பரிந்துரைத்தது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

அந்நிய தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ள துறையில், அவர்கள் சட்டப்பூர்வ தொழிலாளர்களாக அறிவிக்கப் பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு சிறப்பு பாஸ்கள் வழங்கப் பட வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக, அவர்களுக்கு குடியுரிமை வழங்கப் படுகிறது என்று பொருள் படாது என்று அவர் விளக்கினார்.

நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையிலும், சபா மாநிலத்தில், அதிகமான அந்நிய தொழிலாளர்கள் உள்ளனர் என்றும், பல துறைகளில் அவர்களின் சேவை அவசியமாகக் கருதப் படுகிறது என்ற அடிப்படையில் தான், அம்மாநில அரசாங்கம் அப்பரிந்துரையை கடந்தாண்டு முன் வைத்ததாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

அம்மாநிலத்தில் உள்ள சட்டவிரோத தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்க அம்மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அப்பரிந்துரையை பலர் சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றால், நாம் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக செயல் படக் கூடாது.

“சபா மாநிலத்தின் அந்நிய தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப் படாமல், அவர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றினால், அம்மாநிலம் ஸ்தம்பித்து விடும்” என்ரு ஷாஃபி சுட்டிக் காட்டினார்.

அம்மாநிலத்தின் பல்வேறு தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், அந்தத் துறைகளில் எவ்வித பற்றாக்குறையும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற அடிப்படையில் தான் அப்பரிந்துரை முன்வைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post சட்டவிரோத அன்னிய தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக்குக! – சபா முதல்வர் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!