International
சினிமா

நயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து! ராதாரவி மீது விக்னேஷ் சிவன் பாய்ச்சல்!!

ராதாரவி மீது விக்னேஷ் சிவன் பாய்ச்சல்!!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் இயக்குநரே கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, ”திரையுலகில் நல்ல விஷயங்களை வெளிப்படையாகச் சொன்னால், நிறைய புதியவர்கள் வரக்கூடும். இவ்வளவு தான் திரைக்கதையா, நடனமா, கேமராவா என்று தெரிந்தால் நிறைய புதியவர்கள் வரக்கூடும். ஆனால், ஒரு தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் இவ்வளவு பிரச்சினை என்று தெரிந்தால் யாராவது வருவார்களா?

இப்படத்தின் மீது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதற்குக் காரணம் நயன்தாரா. இந்த விழாவுக்கு நயன்தாரா வரவில்லை என்றவுடன் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், நயன்தாரா வந்திருந்தால், இயக்குநர் சுசீந்திரன் அவரையும் அரசியலுக்கு அழைத்திருப்பார். காரணம், யாருக்கு எல்லாம் கூட்டம் கூடுகிறதோ அவர்களை எல்லாம் அரசியலுக்கு அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அனைவரையும் அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த காலத்தில் பேசாமல், தயாரிப்பாளர்கள் எல்லாம் காவலாளிகள் போல் வெளியே நிற்கிறார்கள். தற்போது பிரதம மந்திரி எல்லாம் காவலாளி ஆகிவிட்ட காலம் இது. 5 ஆண்டுகள் முன்பு உள்ளே செல்லும் போது, ரிப்போர்ட்டுடன் வெளியே வருவேன் என்றார் மோடி. இப்போது நான் ஒரு மிகச்சிறந்த காவலாளி என்கிறார். எங்கே உங்களுடைய ரிப்போர்ட் கார்டு? அதை முதலில் கொடுங்கள்.

ஆகவே, தயாரிப்பாளர்களில் யார் காவலாளி என்பதை விட இப்போது நாட்டுக்கு யார் நல்ல காவலாளி என்பதை முடிவு செய்ய வேண்டிய காலமிது”.

இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேசும்போது, நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி, முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.

இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.

ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Please follow and like us:
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!