International
இந்தியா

போதையில் காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தற்கொலைக்கு முயற்சி!

போதையில் காதல் மனைவியை அடித்து கொன்ற வாலிபர் போலீசுக்கு பயந்து தற் கொலைக்கு முயன்றார். அவர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருகச்சால் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மோஹனன். இவருடைய மகன் சுபின் (25). இவர் கோட்டயம் மாவட்டம் ராணி ஊத்திமூடு பகுதியை சேர்ந்த அஸ்வதி (19) என்பவரை காதலித்து வந்தார். அஸ்வதி பிளஸ்-2 படித்து வந்த போது தனது பெரியம்மா வீட்டிற்கு விடுமுறையில் வந்தார். அப்போது அருகில் வசித்து வந்த சுபினுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
பின்னர் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டு மோஹனன் வீட்டின் அருகிலேயே தனியாக வசித்து வந்தனர். சுபினுக்கு கஞ்சா பழக்கம் இருப்பது அஸ்வதிக்கு தெரிய வந்தது. இதையொட்டி அவர் கணவரை கண்டித்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்த சுபின் மீண்டும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் அஸ்வதியை சரமாரியாக தாக்கி அவருடைய தலையை சுவற்றின் மீது தள்ளியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை தடுக்க வந்த மோஹனன், அவருடைய மனைவி குஞ்சுமோல் ஆகியோரையும் சுபின் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் மோஹனனும், குஞ்சுமோலும் சேர்ந்து அஸ்வதியை மீட்டு கருகச்சால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த சுபின் அங்கு பணியில் இருந்த பெண் டாக்டரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபின் கத்தியால் தனது கையையும் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காந்திநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபினை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதற்காக ஜீப்பில் ஏற்றினார்கள். அப்போது தனது கையால் போலீஸ் ஜீப்பின் கண்ணாடியை உடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கோட்டயத்தில் உள்ள மனநலன் காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் சுபின் அளவுக்கு அதிமான கஞ்சா போதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் வன்முறையில் இறங்கி உள்ளார். அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை முடிந்ததும் அவரை கைது செய்து விசாரணை நடத்தப்படும், என்றனர். இந்த சம்பவம் குறித்து கருகச்சால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா போதையில் மனைவியை கொலை செய்து தடுக்க வந்த தனது பெற்றோரையும் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!