International
ஏனைய நாடுகள்

இராணுவ வல்லமை கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தி விடுவார்களோ; அமீர் அலி அச்சம்

கடந்த காலத்தில் இராணுவ வல்லமையோடு இருந்தவர்கள் இராணுவ வல்லமையை கொண்டு பயமுறுத்தி, அச்சுறுத்தி, வடகிழக்கிற்கு அப்பால் இருக்கின்ற சிறிய கிராமங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது என விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (11) இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகிழக்கிலே இருக்கின்ற முஸ்லிம்களுக்கு தேசியத்திலே என்ன நடக்கின்றது என்பது பற்றி பூரண அறிவு இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று கவலையோடு நான் இருக்கின்றேன். வடகிழக்கிற்கு அப்பால் மூன்றில் இரண்டு இஸ்லாமிய சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எப்போது தாக்கப்படுவார்கள், எப்போது விரட்டப்படுவார்கள், எப்போது அச்சுறுத்தல் விடுக்கப்படுவார்கள் என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் முகங்கொடுக்க இருக்கின்றோம்.

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்றுகின்ற ஒரு தேர்தலாக இருக்கும் என்பதில் நீங்கள் அதிகம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

எனவே தேசியத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து எமது சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வேலைத் திட்டத்தில் யாருக்கு வழங்குவதன் மூலம் ஜனாதிபதியாக்க முடியும் என்றும், யாருக்கு அந்த அதிகாரத்தை கொடுப்பதன் மூலம் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தை, முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற வேலைத் திட்டத்தில் விரைவில் அந்த பெயர்களை உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம்.

உங்களுக்குள் பிளவுபட்டு விடாமல், கருத்துவேறுபாடுகள் இடம்பெறாமல், கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விடவும், அதிகமாக முன்டியடித்துக் கொண்டு செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. எங்களை எதிர்த்து கள மிறங்கப்படுகின்றவர்கள் கடந்த காலத்தில் இராணுவ வல்லமையோடு இருந்தவர்கள்.

இராணுவ வல்லமையை கொண்டு பயமுறுத்தி, அச்சுறுத்தி, வடகிழக்கிற்கு அப்பால் இருக்கின்ற சிறிய கிராமங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது. இவர்களை ஒருங்கிணைத்துதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்களை களமிறக்க இருக்கின்றோம். இந்த திட்டத்தில் நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலங்களில் நீங்கள் அளித்த வாக்குகளின் காரணமாக உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்தவன் என்ற மனநிறைவு என்னிடத்தில் உள்ளது. எங்களுக்குள் பல கட்சிகள் பிளவாக இருந்து கொண்டாலும் நாங்கள் சிறுபான்மை என்னும் வேலைத் திட்டத்தில் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டு வருகின்றோம்.

தேர்தல் காலம் வருகின்ற பொழுது தனிப்பட்ட தேர்தல் வருகின்ற போது எடுக்கின்ற தீர்மானம் வேறாக இருந்தாலும் சமூகத்திற்கு பாதிப்பு எற்படப் போகின்றது என்ற தேர்தலிலே நாங்கள் ஒற்றுமைப்பட்டுத்தான் செயற்படுவோம் என்பதையும் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

பாடசாலை அதிபர் எஸ்.ஐயூப்ஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ்.உமர் மௌலானா, பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.அஜ்மீர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.தையூப், திருமதி.எஸ்.நபீரா, நூரியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.பதூர்தீன், தைக்கா பள்ளிவாசல் தலைவர் செய்து உஸைன் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பதினான்கு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டடம் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (கு)

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!