International
ஏனைய நாடுகள்

பொதுமக்களே மெனிங் சந்தைக்கு போக வேண்டாம்…!

புறக்கோட்டை மெனிங் சந்தையில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே மரக்கறி கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும் எனவும் சாதாரண பொதுமக்களுக்கு அங்கு கொள்வனவில் ஈடுபட முடியாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம், 4 மற்றும் 5 ஆம் குறுக்கு வீதி மொத்த வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், நுவரெலியா, பலாங்கொடை, அநுராதபுரம், புத்தளம், கண்டி, கம்பளை உள்ளிட்ட இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருந்து தினமும் 150 லொறிகள் மெனிங் சந்தைக்கு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கிழங்கு, வெங்காயம் மற்றும் இறக்குமதிப் பொருட்களை ஏற்றிய 40க்கும் மேற்பட்ட லொறிகள் 4 மற்றும் 5 ஆம் குறுக்கு வீதிகளுக்கு நாளாந்தம் வருகை தருவதாகவும் தெரிவித்த அவர், இந்த இரு சந்தைகளிலும் இருந்து நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மெனிங் சந்தை அதிகாலை 4 மணி முதல் வழமை போல இயங்கும் எனவும், அதற்கு எந்தவொரு தடையும் கிடையாது எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் குறிப்பிட்டார்.

அத்துடன், மெனிங் சந்தைக்கு மரக்கறி மற்றும் பழங்களை ஏற்றி வரும் லொறிகளுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த லொறிகளுக்கு பொலிஸாரினால் எந்தவித தடையும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் இதன்போது உறுதியளித்தார்.

அதே போல, மெனிங் சந்தையில் இருந்து நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் எவ்வித தடையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமது பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்படும் குறித்த அத்தியாவசியப் பொருட்களை பாவனையாளர்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பொதுமக்களே மெனிங் சந்தைக்கு போக வேண்டாம்…! appeared first on NewUthayan.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!