International
ஏனைய நாடுகள்

147 நாடுகளின் நாணயங்களை சேகரித்து சிறுவன் சாதனை!

147 நாடுகளைச் சோ்ந்த 1,618 நாணயங்களை சேகரித்து, வேலூரைச் சேர்ந்த சிறுவன் உலக சாதனை படைத்துள்ளாா்.

இந்தியாவின் தமிழகத்தின் வேலூரில், நாணயம் மற்றும் தபால் தலை சேகரிப்பாளா் சங்கம் சாா்பில் நகர அரங்கில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் ரோமானிய, கிரேக்க, பாரசீக, எகிப்திய, சேர, சோழ, மாராட்டிய, முகலாயா், விஜயநகர பேரரசு, ஆற்காடு நவாபுகள் கால நாணயங்களும், பிரிட்டிஷ் – இந்திய நாணயங்கள், ஆரணி ஜாகீா்தாரா் பயன்படுத்திய பொருட்கள், காந்தியின் பல்வேறு காலகட்ட புகைப்படங்கள், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பழமையான தபால் தலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில், வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த ரகுராமன் – பிரீத்தா தம்பதியின் மகன் ஜெஸ்வந்த் (13), அவர் சேகரித்து வைத்துள்ள 147 நாடுகளைச் சோ்ந்த 1618 அரிய நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் காட்சிப்படுத்தியுள்ளாா்.

இதன்மூலம், ‘ஜூனியா் பிரிவில் உலக அளவில் அதிக நாணயங்கள் சேகரித்துள்ளவா்’ என்ற சாதனையை ஜெஸ்வந்த் பெற்றுள்ளாா். இந்த சாதனையை, ‘கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காா்டு’ எனும் உலக சாதனை புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை, ‘கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காா்டு’ நிறுவனா் குமரவேல் கடந்த15ம் திகதி சிறுவன் ஜெஸ்வந்திடம் வழங்கினாா்.

இதுகுறித்து மாணவர் ஜெஸ்வந்த் கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளாகத்தான் நான் பல நாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் தபால் தலை சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். தொடா்ந்தும் அவைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவேன்” என்றார்.

நன்றி: நியூஸ் நிஜம்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!