International
கனடா

ஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும் படங்கள் எம்மவரின் முயற்சிகளின் அடுத்த படியாக நிறுவி நிற்கின்றன. 350 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்Algonquin திரை அரங்கை நிறைத்தனர். குறும்பட நிறைவில் கலந்துரையாடலும் இடம்பெற்றது, பலரும் மிக தரமான குறும்படங்கள் எனக்கருத்து தெரிவித்தனர்.

திரையிடப்பட்ட ஆறு திரைப்படங்களில், ஐந்து ஒட்டாவாவினைச் சேர்ந்த அம்புலி மீடியா குழுமத்தினால் உருவாக்கப்பட்டிருந்தது.   ஆறாவது படம், தமிழகத்தில் தற்போது வசிக்கும் இலங்கைத் தமிழர், கவிஞர் அகரமுதல்வனால் இயக்கப்பட்டிருந்தது.

அருவி, இயல்வது கரவேல், அவளும் நானும், உறவுச் சிறை என்ற நான்கு குறும்படங்களை சிவகுமார் இயக்கியிருக்க, குறியீட்டுப் படமான மணல் நாடு என்ற குறும் படத்தினை சிவரூபன் இயக்கி இருந்தார்.

அருவி திரைப்படம் ஏற்கனவே சில இடங்களில் திரையிடப்பட்டிருந்தது.  ஒரு குழந்தையின் தனித்தன்மையினைப் போற்றாது, பெற்றோர் தங்களின் விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிப்பதினைப் பற்றிய இந்தப்படம், சிறந்த குறும்படமாக 2016 ரொரொன்ரோ தமிழ் திரைப்பட விழாவில் தெரிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதில் நடித்த வானதி தனேஸ் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான சிறப்பி விருதினையும் பெற்றிருந்தார்.

நாம் வாழும் காலத்தில் மற்றவர்களின் வாழ்வினை மேம்படுத்த எதாவதொரு வழியில் உதவுதல் வேண்டும், அதுவே வாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றும் என்ற கருத்தினை இயல்வது கரவேல் படம் உணர்த்தியது.  பாத்திரங்களின் நடிப்பு மிக நன்றாகப் படமாக்கப்படிருந்தது.

மணல் நாடு, ஒரு புதிய முயற்சியாக இருந்தது. குறியீட்டு வடிவில் எமது போராட்டத்தினைச் சொல்லுகின்ற அதே வேளை, கனவுகள் சிதைக்கப்படுகின்ற போது எழும் வலியினை இப்படம் சொல்கிறது.  தங்களுக்குச் சொந்தமானவொன்றை வலுவுள்ளோர் தட்டிப்பறிக்கின்ற எந்தவொரு நிகழ்வினையும் இந்தப்படம் குறியீடாகச் சொல்லுகின்றது.

மன உளைச்சலில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதையாக, அவளும் நானும் உருவாக்கப்பட்டிருந்தது.  தன்நிலை மறந்து நிழல் உலகில் வாழ்கின்ற இளைஞனாக அஜந்தன் திரு, மிகவும் அற்புதமாக நடித்திருந்தார்.

திரையிடப்பட்ட படங்களில் சற்றே நீண்ட படைப்பாக, உறவுச் சிறை அமைந்திருந்தது. இது புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற முதியவர்களின் நிலையினை மிகவும் அழகாகப் பதிவு செய்திருந்தது.  முதியவரின் பாத்திரத்தில் நடித்துள்ள தம்பு தேவராஜா, ஒரு தேர்ந்த நடிகரைப் போல சிறப்பாக நடித்திருந்தார். இவ்வாண்டு, நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான பரிசினை, இந்தப் படத்திற்காக தம்பு தேவராஜா தெரிவு செய்யப்படமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நேர்த்தியான படப்பிடிப்பும் படத்தொகுப்பும் இப்படத்தினை ஒரு தரமான படைப்பாக உயர்த்தி நிற்கிறது.  இயக்குநர் சிவகுமார் பாராட்டப்பட வேண்டியவர்.

இறுதியாக, கவிஞர் அகரமுதல்வனின் பதுங்குகுழி திரையிடப்பட்டது.  இது இறுதிப்போரில் பதுங்குகுழிக்குள் நடந்த கொடுமையொன்றினை எடுத்துச் சொல்லியுள்ளது.  முள்ளிவாய்க்கால் அனர்த்தங்களின் நேரடிச்சாட்சியான கவிஞர், இந்தப் படத்தில் வலியும் வேதனையுமாய் ஒரு பதுங்குகுழி நிகழ்வினைப் படமாக்கியிருக்கிறார்.

வெறும் திரைப்பட முயற்சிகள் என்ற நிலையில் இருந்த எம்மவரின் படைப்புக்கள், ஒரு தரமான துறையாக வளர்ந்து வருவது அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கும்  ஈழம் மற்றும் புலம்பெயர் படைப்புகளில் நிதர்சனமாகத் தெரிகிறது. இவற்றினை வரவேற்று, எமது கதைகளை நாமே சொல்லக் கூடியவர்களாக வளர்ந்திடல் வெகு தொலைவிலில்லை என்றே தோன்றுகிறது.

White Conch Studios தயாரிப்பில் Ambuli Media வழங்கும் Weeping Buddha எனும் திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் தகவலையும் அதன் முன்னோட்டமும் நிகழ்வில் பகிர்ந்து  கொள்ளப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!