இல் து பிரான்ஸ் கடந்த வருடத்தில் பாரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் வருவாயை பிரதானமாக நம்பி இருக்கும் இல் து பிரான்ஸ், கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10.8% வீத பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை கணிசமாக குறைந்தும், இல் து பிரான்சுக்குள் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டும் இருந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, 2020 ஆம் ஆண்டின் முதன் 9 மாதங்களில் 95.000 பேருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.3% வீதமாக உயர்வடைந்தது. (இது கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியுடன் ஒப்பிடுகையில் 1.2 புள்ளிகள் அதிகமாகும்)
பிரெஞ்சு மாகாணங்களில் அதிக வருவாய் இழப்பை சந்தித்த மாகாணமாக இல் து பிரான்ஸ் உள்ளது. சுற்றுலாத்தலங்கள், உணவகங்கள், விடுதிகள், வாகன சாரதிகள், விமான நிலைய வருவாய் என அனைத்து வழிகளிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.