உந்துருளி ஒன்றை கொடுத்து மற்றொரு உந்துருளியை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, 11 மணிக்கு சற்று முன்பாக இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய இளம் பெண் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும் தங்களது உந்துருளியை கொடுத்து மற்றுமொரு உந்துருளிக்கு மாற்றிக்கொள்ள Gagny நகரின் avenue des Coquelicots வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஆண் ஒருவரும் அவரது மனைவி மற்றும் அவர்களது 17 வயதுடைய மகனும் இருந்துள்ளார். குறித்த இரு தரப்புக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கவில்லை. இணையத்தளம் ஊடாக இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருவரும் தங்களது உந்துருளிகளை மாற்றிக்கொண்ட பின்னர், குறித்த ஆண் வைத்திருந்த உந்துருளியில் சில பழுதுகள் இருப்பதை கவனித்த இளம் பெண், அதற்குரிய பணத்தினை தரும் படி கோரியுள்ளார். அல்லது தமது உந்துருளியை திருப்பி தாருங்கள் எனவும் கேட்க, இரு தரப்புக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் முடிவில் ஆத்திரமடைந்த குறித்த ஆண் இளம் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தொண்டையில் பாய்ந்த கத்தி பலத்த வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குறித்த இளம் பெண் சில நிமிடங்களில் சாவடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஆண், அவரது மனைவி மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.