International
மலேசியா

கடலுக்குள் கார் பாய்ந்த சம்பவம்: வைதீஸ்வரன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

புக்கிட் மெர்தாஜாம்,பிப்.11- சென்ற மாதம் பினாங்கு பாலத்தில் இருந்து கார் கடலுக்குள் விழுந்து மோய் யூன் பெங் என்ற 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க வாய்ப்பில்லை. மோய் யூன் பெங் ஓட்டிச் சென்ற கார் கடலில் விழ காரணமாகி விட்டோமே என்று கதறி அழுத தொயோட்டா வியோஸ் கார் ஓட்டுநரான 21 வயது எம்.கே வைதீஸ்வரனையும் மறக்க முடியாது.

இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மோய் யூன் பெங்கிற்கு மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக வைதீஸ்வரன் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால், நண்பனின்  மரணத்திற்கு காரணமாகிவிட்டோமே என்று அன்று கதறி அழுதவர், இன்று தம் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதனை மறுத்து விசாரணை கோரியுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

ஜனவரி 20-ஆம் தேதி, அதிகாலை 3 மணி அளவில் பினாங்கு பாலத்தின் 4-ஆவது கிலோமீட்டரில் வைத்தீஸ்வரன் செலுத்திய தொயோட்டா வியோஸ் கார், மோய் பயணித்த மஸ்டா காரை மோதித் தள்ளியதில் மஸ்டா கார் கடலுக்குள் பாய்ந்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலுக்கு பாய்ந்த கார் மூன்று நாட்களுக்கு பிறகே வெளியே கொண்டு வரப்பட்டது. அதோடு காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த மோயின் சடலமும் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் செக்‌ஷன் 41 (1)வின் கீழ் வைதீஸ்வரன் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றம் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். மேலும், அவரது கார் ஓட்டும் அனுமதியும் 3 ஆண்டுகளுக்கு பறிமுதல் செய்யப்படலாம்.

வைதீஸ்வரன் 7,000 ரிங்கிட் ஜாமின் தொகையிலும், ஒரு தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மார்ச் 18-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும். மேலும், இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, வைதீஸ்வரினின் கார் ஓட்டும் அனுமதி முடக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

The post கடலுக்குள் கார் பாய்ந்த சம்பவம்: வைதீஸ்வரன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!