International
மலேசியா

‘மைக்கா திருப்பிக் கொடுத்தது என் பணம்தான்!” -வேள்பாரி விளக்கம்

கோலாலம்பூர், மார்ச்,1- மைக்கா ஹோல்டிங்ஸ் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதற்கு உதவும் வகையில் தாம் சொந்தப் பணம் வழங்கி இருந்ததாக முன்னாள் மைக்கா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தலைமைச் செயல்நிலை அதிகாரியான எஸ். வேள்பாரி தெரிவித்தார்.

அப்படி வழங்கங்கப்பட்ட பணம்தான் அந்த நிறுவனத்திடமிருந்து தமக்கு திருப்பி விடப்பட்டது. உண்மையில் தம்முடைய பணத்தைத் தான் அந்த நிறுவனம் திருப்பிக் கொடுத்தது என்று அவர் விளக்கம் அளித்தார்.

நிதி ரீதியில் மைக்கா கஷ்டத்தில் இருந்த நிலையில் தான் 2009-இல் நான் அதன் தலைமைச் செயல் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். மைக்கா தனது நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அவ்வப்போது நான் அதற்குப் பணம் கொடுத்தேன். மைக்காவுக்கு பணம் வந்த போது அதனை எனக்குத் திருப்பிக் கொடுத்தார்கள் என்று மஇகாவின் தலைமைச் செயலாளருமான வேள்பாரி சொன்னார்.

சொல்லப் போனால் அந்தத் தருணத்தில் மைக்கா முன்பணமாக என்னிடம் பெற்ற பணத்திற்காக அது என்னிடம் கடன் பட்டிருந்தது. மேலும் எனக்கு தரப்பட வேண்டிய சம்பளமும் தரப்படாமல் இருந்தது என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

மைக்காவின் பல லட்சக் கணக்கான ரிங்கிட் வேள்பாரிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டிருப்பதாக சரவாக் ரிப்போர்ட் என்ற இணைய ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது தொடர்பில் விடுத்த அறிக்கையில் வேள்பாரி மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.

20 முறை ரொக்கப் பணப் பரிமாற்றங்கள் உள்பட மைக்காவினால் மொத்தம் 19 லட்சம் ரிங்கிட் வேள்பாரிக்கு தரப்பட்டிருப்பதாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று சரவாக் ரிப்போர்ட் கூறியுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ஒ.கே.ஏ மோட்டோர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு குத்தகையை ரத்து செய்வதற்காகவும் மென்பொருள் வாங்குவதற்கான முன்பணமாகவும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 100 ரிங்கிட் ஒரு முறையும், 21 லட்சம் ரிங்கிட் ஒரு முறையும் வழங்கப் பட்டுள்ளதாக சரவா ரிப்போர்ட் கூறுகிறது.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள வேள்பாரிக்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு 11 மில்லியன் ரிங்கிட், பேங்க் நெகாரா அனுமதியுடன் செலுத்தப்பட்டிருப்பதாக சரவா ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகைகள் செலுத்தப்பட்ட போது மைக்கா இயக்குனர்கள் வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என்று அது கூறியுள்ளது.

இருப்பினும் ஒ.கே.ஏ மோட்டோர்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க நிறுவனத்திற்கான தொகைகள் மைக்கா இயக்குனர் வாரிய அங்கீகாரத்துடன் தான் வழங்கப்பட்டது என்று வேள்பாரி சொன்னார்.

இந்தப் பணம் மைக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீடு என்ற இணக்கத்தின் பேரில், மைக்கா வாரிய இயக்குனர்களும் ஆண்டுக் கூட்டத்தில் மைக்கா உறுப்பினர்களும், அங்கீகரித்த பின்னரே வழங்கப்பட்டது என்றார் அவர்.

இதனிடையே இந்தச் செய்தியை சரவாக் ரிப்போர்ட், வெளியிடுவதற்கு முன்னதாக, ஒரு தனிநபர் இந்தச் செய்தியை இல்லாமல் ஆக்குவதற்காக 35 லட்சம் ரிங்கிட் பணம் கேட்டு தன்னை ‘பிளாக்மெய்ல்’ செய்ய முயன்றதாக வேள்பாரி சொன்னார். இதற்குத் தாம் பணிய மறுக்கவே அந்தச் செய்தி பின்னர் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

The post ‘மைக்கா திருப்பிக் கொடுத்தது என் பணம்தான்!” -வேள்பாரி விளக்கம் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!