International
இலங்கை

கோட்டாபயவிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்த மற்றும் சுற்றியுள்ள பௌத்த தேரர்களின் சக்தியும், வியத்மக என்ற புத்திஜீவிகளின் ஒன்றியமுமே அவரை பிழையான வழியில் இட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கோட்டாபய ராஜபக்சவை சுற்றியுள்ள சில சக்திகள் அவரை பிழையான வழிகளுக்கு இட்டுச்செல்கின்றது.

எமது அரசாங்கம் இருக்கும்போது ஐயோ வீதிகளில் போகமுடியவில்லை, தினமும் ஆர்பாட்டங்கள் இருப்பதாகக் கூறினார்கள். முதுகெலும்பு அற்ற அரசாங்கம் என்றார்கள். ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்கள்.

ஆனால் நேற்று கறுப்பு உடைகளை அணிந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஜனநாயக ரீதியில் அந்த உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைத் தடுக்க முடியாது.

கொஞ்சம் வரையறையை மீறிச்செல்லும்போது தண்ணீர் வீச்சுத் தாக்குதலை நடத்தினால் பிரச்சினையில்லை. எல்லையை மீறிச் செல்லக்கூடாது என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கேயாவது பதாதை வைக்கப்பட்டதற்காக இவர்கள் சென்று தினமும் ஆர்ப்பாட்ட இடம் என்கிற பதாதைக்குப் பின்னால் இருந்து ஆர்ப்பாட்டங்களை செய்வார்கள் என நான் நினைக்கவில்லை.

இதுதான் ஆர்ப்பாட்ட இடம், இதுதான் இலஞ்சம் பெறும் இடம், இதுதான் ஆட்களை கொலை செய்கின்ற இடம் என்று அரசாங்கம் இடங்களை ஒதுக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கேலியாகக் கூறியிருக்கிறார்கள்.

இப்படி செய்வதனால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது. முறைப்படி ஜனநாயக வழியில் செல்ல வேண்டும். பழைய இராணுவத்தினரை ஈடுபடுத்தி இதனை தீர்க்க முடியாது, பழைய ஜெனரல்களை ஈடுபடுத்தி தீர்வுகாண முடியாது.

வியத்மக என்கிற புத்திஜீவிகள் ஒன்றியம் அரசாங்கத்தின் செயற்பாடு. அவர்களை விடவும் கிராமத்திலுள்ளவர்களுக்கு புரிதல் உள்ளது. நான் இப்போது அதிகமாக சினிமா வீடியோக்களை பார்த்து வருகிறேன்.

அதில் ஹிட்லரின் பின்னர் இருந்த நியூரம்பேர்க் நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க பலரை அழைத்துவந்தார்கள். அந்த நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் இரட்டை புதுமானியங்களைக் கொண்டிருந்தவர்கள்.

வியத்மகவில் உள்ளவர்களைப் போன்று. அவர்கள்தான் சென்று கொடூரமாக கொலைகளை செய்தார்கள். இப்போது ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் அரசாங்கம் மீது அதிருப்தியில்தான் உள்ளனர்.

ஆட்சியிலிருந்த எங்களுக்கும் இப்போது பாதகமில்லை. எனவே இதனை சொல்லியாக வேண்டும்.

கூறினால் எமது தரப்பினரும் எதிர்ப்பார்ப்பர்கள் இருந்தாலும் இன்று கோட்டாபய ராஜபக்ச அவரை சுற்றியுள்ள பௌத்த தேரர்களின் சக்தியே இதற்கு காரணம்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களே அவரை கொன்றார்கள். அப்படியானால் சரியானதை செய்ய சிறந்த முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்” என்றார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!