International
இலங்கை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சர்வதேசத்திடம் இருந்து இறக்குமதியாகும் பண்டமல்ல – டக்ளஸ்

இந்த நாட்டின் நிலைத் தன்மைக்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். தவிர தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மேலும் மேலும் பாதிப்புகளையே அடைய வேண்டியிருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை உற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் இங்கு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கு சிலர் இறக்குமதி அரசியல் தீர்வு குறித்தே காலம்பூராகவும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாய் கடித்தால் என்ன,. பூச்சி பூரான் கொட்டினால் என்ன, அருகில் உள்ள வைத்தியசாலையையை நாடாமால் அதற்குக்கூட சர்வதேசத்தை நோக்கி அண்ணார்ந்து பார்த்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்போரையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது சர்வதேச சமூகத்திடமிருந்து இறக்குமதியாகும் வெறும் பண்டமல்ல. மாறாக,.. எமது பேரம் பேசும் அரசியல் பலத்தை வைத்து எமக்குள் நாமே இதுவரை பேசித்தீர்த்திருக்க வேண்டிய உள்நாட்டு விவகாரம்.

சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்குத் தீர்வு தருவது உண்மையென்றால் முள்ளிவாய்க்கால் அவலங்களின் போது, ஏன் அந்த சர்வதேச சமூகம் வந்து நின்று எமது மக்களைக் காக்கவில்லை என்று நான் கேட்கிறேன்.

அதற்கு முந்திய ஆட்சிகளின் போது 1958, 1977, 1983 களில் நடந்த இன அழித்தொழிப்பு வன்முறை சாக்காட்டில் எமது மக்கள் அவலங்களைச் சந்தித்திருந்த போது கூட அந்த சர்வதேச சமூகம் வந்து நின்று எமது மக்களை காத்திருக்கவில்லை.

அது ஏனென்று நான் கேட்கிறேன். எல்லா ஆட்சிக்காலங்களிலும் எமது மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

அப்போது இங்கு அபயக்கரம் நீட்டி வந்திருக்காத சர்வதேச சமூகம் தமிழர்களின் அரசியல் தீர்வை எமக்கு இறக்குமதி செய்து தருவார்கள் என்று இனியும் நாம் நம்பியிருக்க முடியுமா?

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். ஒரு மருத்துவிச்சியின் துணையாக எந்த நாடுகளும் வந்தெமக்கு அனுசரணை வழங்கட்டும்.

இது வரை எமது பிரச்சினைகளை எமக்குள் நாமே பேசித்தீர்த்திருக்க வேண்டும். அதற்கு எமது அரசியல் பலத்தைச் சரிவரப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அரசுடன் பேசுவது கூனிக்குறுதல் அல்ல. அடிமைத்தனமும் அல்ல. தத்தமது சொந்தச் சலுகைகளுக்காக மட்டும் திரை மறைவில் அரசுடன் கூனிக்குறுகி நின்று பேசும் பணப்பெட்டி அரசியல் வாதிகள்.

தமிழர்களின் உரிமைகளுக்காக மட்டும் தமது அரசியல் பலத்தை வைத்து அவர்கள் ஏன் பேரம் பேசவில்லை என்று நான் கேட்கிறேன்.

இனியென்ன தேர்தல் காலம்.,. சர்வதேச சமூகம் கூர்ந்து பார்க்கிறது,. குனிந்து பார்க்கிறது.. நிமிர்ந்து பார்க்கிறது,.. என்றெல்லாம் வழமை போல் புலுடா விடுவார்கள். தமிழ் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

ஆன்மீக வரலாற்றில் ஒரு கதை உண்டு. உலகத்தை முதலில் சுற்றி வருபவர்கள் யாரோ அவருக்கே ஞானப்பழம்.

அம்மையும் அப்பனுமே உலகமென தனது தாய் தந்தையரை சுற்றி வந்து பிள்ளையார் ஞானப்பழத்தை வெற்றி கொண்டதும். உலகெல்லாம் சுற்றி வந்து ஞானப்பழம் இழந்து போட்டியில் தோற்ற முருகப்பெருமான் போல் ஆண்டியாய் நின்றதும் வரலாறு.

இதில் பணப்பெட்டி அரசியல்வாதிகள் பிள்ளையார் நிலையா? அல்லது முருகப்பெருமான் நிலையா? வரலாற்றை உணர மறுத்தால் ஆண்டிகள் ஆவீர்கள் என்பதே உண்மை.

எனவே, இந்த நாட்டின் நிலைத் தன்மைக்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். தவிர, தான்றோன்றித்தனமான செயற்பாடுகளால் மேலும், மேலும் பாதிப்புகளையே அடைய வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!