International
இலங்கை

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒலித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சாட்சியங்கள்!

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆறு பேர் பிரித்தானிய பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாநாடொன்றில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி, கடந்த செப்ரெம்பர் 4ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த உப-மாநாடு ஒன்றிலேயே இந்த சாட்சியங்கள் வழங்கப்பட்டன.

பாலகுமார் தினேசன், ரவீந்திரன் பெரியதம்பி, திவேந்திரன், மதனகுமரன் அழகையா, கார்த்தீபன் யோகமனோகரன் ஆகியோர் எவ்வாறு, எப்போது, எந்த தருணத்தில் தமது உறவுகள் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனை சாட்சியங்களாக தெரிவித்தனர்.

இந்த உப-மாநாட்டில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் தொடக்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இணைய வழியாக நிகழ்விற்கான தொடக்க உரையினை நிகழ்த்தியிருந்தார்.

பிரித்தானிய பராளுமன்ற உறுப்பினர் GARETH THOMAS, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து நம்பகமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்ததோடு, இந்த விவகாரத்தினை தமது பாராளுமன்றத்துக்கும் ஐ.நா.வுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் தங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழர்கள் மீது திட்டமிட்ட மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகள் ஆதரிப்பதை விடுத்து இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதி கிடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 வருடங்களுக்கும் மேலாகியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

சிறிலங்கா போர்-குற்றவாளிகளையும் அதன் ஆயுதப் படைகளையும் ஊக்கிவிக்கிறது’ என்ற தலைப்பில் உரையாற்றிய டி.ஜி.டி.இ.யின் செனட்டர்களில் ஒருவரான திரு ராபர்ட் எவன்ஸ், போர்க்குற்றவாளிகளை ஊக்குவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் இராணுவ தளபதியாக சர்வேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து ஐ.நா தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா ‘பொய்யான பரப்புரையை தொடர்கிறது மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துகிறது’ எனும் தொனிப்பொருளில் கருத்தினை வழங்கிய மனித உரிமையாளர் ஷிவானி ஜெகராஜா, இனப்படுகொலை நிகழ்த்திய அரசால் தமிழ் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் இறப்பு சான்றிதழ்களில் கையெழுத்திட நிர்பந்திக்கப்படுகிறார்கள், எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுகின்றார்கள், அல்லது உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றார்கள் குற்றஞ்சாட்டினார்.

‘இலங்கையில் தமிழர்கள் கட்டாயமாக காணாமல் போதல்’ என்ற தலைப்பில் உரையாற்றிய மனித உரிமையாளர் பேட்ரிக் லூயிஸ் சர்வதேச சட்டம் ஒவ்வொரு தனிநபருக்கும் பொறுப்புக்கூறக்கூடியது என்றார்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட டொக்டர் மார்ட்டின், தமிழினப்படுகொலை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

உலகில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவோர் நாடுகளில் உலக பட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தில் என்றும், குழந்தைகள் காணாமல் போன ஒரே நாடு இதுதான் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!