International
இலங்கை

புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது : ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் புர்கா, நிகாப் உடைக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கையில் மாத்திரம் இந்த சட்டத்தை கொண்டுவருவதற்கு அவசியமில்லை. நிரந்த தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படபோது, அதற்கான மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவார கால அவகாசம் கோரியிருக்கிறேன்.

அதற்குள் இதற்கான நிரந்தர தீர்வு குறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற, முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் என்பது வெளிச்சக்திகளின் சதியின் ஒரு வெளிப்பாடு. அதில் பகடைகளாக பாவிக்கப்பட்டவர்கள் ஒரு கூலிப்படையினர். இந்த தீவிரவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறிகள் விடயத்தில் நாங்கள் சிறிது அசட்டையாக இருந்துவிட்டோம். ஆனால், ஜம்மியத்துல் உலமா ஜனவரி மாதத்திலேயே இதுகுறித்து அபாய அறிவிப்பை விடுத்திருந்தது.

பயங்கரவாதத்துக்கு இஸ்லாத்துக்கும் முடிச்சுப்போடுவதற்கு எத்தனிப்பவர்கள், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீது கை வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயங்களைப் பார்த்து பதற்றப்படுவதை நாங்கள் முதலில் நிறுத்தவேண்டும். இஸ்லாம் வளர்ந்தமைக்கு பிரதான காரணம் சகிப்புத்தன்மையாகும். ஒருசில பித்தலாட்டக்காரர்களின் செயற்பாடுகளினால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்ற மனப்பாங்கை கைவிடவேண்டும்.

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் எங்களது உரிமைகளுக்காக அத்தனை பலங்களையும் பிரயோகித்து போராட வேண்டும். இந்தப் போராட்டம் அரசியல், ஆன்மீக, தொழில்சார் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். தெளிவான முறையில் பேசுவதன்மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என்பதில் நாங்கள் பூரண நம்பிக்கைகொள்ள வேண்டும்.

அமைச்சு பதவிகளை பொறுப்பெடுத்த மறுநாள் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், நிகாப் மற்றும் புர்கா உடையை நிரந்தரமாக தடைசெய்வதற்கான உத்தரவை அமைச்சர் தலதா அத்துகொரல சமர்ப்பித்திருந்தார். அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட்டால் நிகாப், புர்கா தடை இல்லாமல் போய்விடும். அதன்பின்னர் நாட்டிலுள்ள பேரினவாத அமைப்புகள் அதை தூக்கிப்பிடித்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் அதை நிரந்தரமாக தடைசெய்வதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டுகிறது.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நான் வாசித்துப் பார்த்தபின், இந்தப் பிராந்தியத்தில் நிகாப், புர்கா ஆடைகளை தடைசெய்யும் முதலாவது நாடாக இலங்கை வருவதற்கு எந்த தேவையுமில்லை என்பதை நான் சுட்டிக்காட்டினேன். ஜனாதிபதிதான் இந்த விடயத்தை அவசரப்படுத்துவதாக தலதா அத்துக்கொரல சொன்னார். நான் ஜனாதிபதியிடமும் விடயத்தை எடுத்துக்கூறி, சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசி மாற்றுவழி குறித்து தீர்மானிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் கேட்டிருக்கிறேன். இந்த சட்டமூலம் குறித்தும் நான் பிரதமரிடம் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உடைமைகளுக்கும் கண்ணியத்துக்கும் சில சோதனைகள் வரலாம். இந்த சூழ்நிலையில் முகம் மூடுவதை தற்காலிகமாக தவிர்ந்துகொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பெண்களுக்கு அறிவிறுத்தியிருந்தன. நிகாப், புர்காவுக்கு நிரந்தர தடையுத்தரவு வரக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தனிமனித உரிமைகளில் கைவைக்க முடியாது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகவே கருதப்பட வேண்டும்.

முஸ்லிம் விவாவக, விவாகரத்து சட்டத்தில் இரு அறிக்கைகள் இருப்பதாகவும், எங்களுக்குள் உள்முரண்பாடு காணப்படுவதுமான தோற்றப்பாடு வெளியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இருக்கின்ற ஓர் அறிக்கையில் சில விவகாரங்களில் உடன்பாடு காணப்படாமல் இருப்பதே உண்மையாகும். முன்வைக்கப்படும் மாற்றுத் தீர்வுகளில் சட்டம் (ஷரீஆ) தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாங்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். இதில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து, இதனை சட்டவாக்கப்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

முஸ்லிம் விவாவக, விவாகரத்து சட்டம் முழுவதும் ஷரீஆ அல்ல. அதற்கு முரணான சில விடயங்களும் அதில் காணப்படுகின்றன. உதாரணமாக, இஸ்லாத்தில் இல்லாத சீதனம் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இதை இல்லாமல் செய்யவேண்டும். சமூகத்தில் செய்யப்பட்ட சில வழக்காறு விடயங்களையும் உள்வாங்கி செய்யப்பட்ட இந்த சட்டத்தில், இன்னும் ஓரிரு விடயங்கள் மாத்திரமே இணக்கப்பாடில்லாமல் இருக்கிறது. இவற்றுக்கும் விரைவில் விடைகாணலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்துகொண்டிருக்கிறோம்.

மத்ரசாக்களை நெறிப்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வதற்கான சட்டவாக்கம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. மத்ரசாக்களில் காணப்படும் சமூகம்சார்ந்த பலவீனங்களை களைவதுதான் இதன் நோக்கமாகும். மத்ரசாக்களிலிருந்து வெளியேறும் ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்) தரமானவர்களாவும் தொழில்பயிற்சி பெற்றவர்களாவும் இருப்பதற்கான திட்டங்களை அரசாங்கத்தினூடாக செய்வதற்கு துறைசார்ந்தவர்கள் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இக்கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகைதந்த பெருந்திரளான சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!