International
இலங்கை

முள்ளிவாய்க்கால் கொடூரம்… கண்ணீர் சிந்த வைக்கும் நினைவுகள்!

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர், 10 ஆண்டுகளுக்கு முன்பாக, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது.

இலங்கை இறுதிப் போரின் போது, அனைத்து தரப்பினராலும், கைவிடப்பட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி. சுற்றிலும் இலங்கை அரசின் ராணுவம் முற்றுகையிட்டு விட்ட நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள திறந்தவெளியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடாரங்களை கட்டி தங்கியிருந்தனர். விடுதலைப் புலிகளின் வாகனங்களும் அங்கு அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

வாகனங்களுக்கு அடியில் பதுங்கு குழிகளைத் தோண்டி, தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், ஈவு இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.

உயிர் போகும் வேளையில், உதிரம் வழிந்தோட அவர்கள் அலறிய சத்தம் இன்னும் தங்கள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருப்பதாக, இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, தற்போது வீடு, நிலம், உறவுகளை இழந்து, எதிர்காலம் சூனியமாகிவிட்ட நிலையில் உள்ள மக்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த கொடூர தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இவ்வாறு 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆகுதியாக்கி, ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால். இதன் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் கோரத்தினை நினைவுபடுத்தி காயம்பட்ட கனவுகள் என்ற தலைப்பில் வெளியான பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!