International
மலேசியா

பரபரப்பான விற்பனையை நோக்கி பொங்கல் பானை!

கோலாலம்பூர், ஜன.10- தைத்திருநாள் கொண்டாத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் பட்சத்தில், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் உள்ள வியாபாரிகள் பொங்கல் பானை விற்பனையைத் தொடங்கி விட்டனர்.

பொங்கலுக்காக அழகழகாக வர்ணம் பூசப்பட்டுள்ள இந்த மண் பானைகள் பெரும்பாலும் கோலாசிலாங்கூர் வட்டாரத்தில் இருந்துதான் தருவிக்கப்படுவதாக பிரிக்பீல்ட்ஸ் வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல், இவ்வாண்டு பொங்கலுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மண் பானைகளின் விலையும் 20 விழுக்காடு உயர்வு கண்டிருப்பதாக, கல்யாண் மொத்த வியாபாரக் கடையின் பணியாளர் திலகவதி என்பவர் கூறினார். கடந்தாண்டு 10 விழுக்காடு மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டிருந்தது என்றார் அவர்.

ஆனால், பொங்கல் பானைகள் எவ்வளவு விலை ஏறினாலும் மக்கள் அதைக் கண்டுக் கொள்வதில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஆண்டுக்கு ஒரு முறை வரும் பொங்கல் திருநாளுக்காக சற்று விலைக் கொடுத்து மண் பானையை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதில்லையாம்.

அலுமினியம், சில்வர் பாத்திரங்களை விடுத்து, விழாக் காலங்களிலாவது பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் மக்கள் மண்பானைகளை வாங்குகின்றனர்.

அதிலும் விவசாயத்தைப் போற்றும் திருநாளான பொங்கலுக்கு விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் பானையில் பொங்கல் வைப்பது நமது பாரம்பரியம் ஆயிற்றே. குக்கரில் பொங்கல் வைத்தால் நன்றாகவா இருக்கும்? அதனால், மக்கள் இன்னமும் மண் பானைகளை விரும்புகிறார்கள் என மேலும் சில வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்தப் பொங்கலுக்கு கரும்புகள் குறைந்த அளவிலேயே கையிருப்பில் உள்ளதாம். அதனால், இவ்வாண்டு இந்தியாவில் இருந்து கரும்புகள் இறக்குமதி செய்வதாக மற்றொரு வியாபாரியான இராமன் என்பவர் கூறினார்.

The post பரபரப்பான விற்பனையை நோக்கி பொங்கல் பானை! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!