International
தாயும் சேயும்

ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்

காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பசித்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்கள். பசி வந்தால் நமக்கே எதுவும் புரியாது. அவ்வாறெனில் குழந்தைகளை கேட்கவேண்டுமா? மூளையின் செயல்பாடுகளுக்கு பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக பிஸ்கெட்டும், பிரெட்டும் சாப்பிட்டுவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளோ வகுப்பில் தூங்கி வழிகின்றனர். குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளார்கள் என்றால் அதற்கு காலை உணவை சாப்பிடவில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.

குழந்தைகளுக்கு காலை உணவு சரியில்லை என்றால்…

வகுப்பில் தூங்கி வழிவார்கள்

படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள்

உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்

படிப்பது எதுவும் உள்ளத்தில் பதியாது

படிப்பு ஒரு சுமையாக மாறும்

படித்தவற்றை நினைவூட்டுவது கடினமாகும்.

ஆனால், குழந்தைகளுக்கு காலை உணவை அளிக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த குழப்பமான மனோநிலையில் உள்ளனர். ஏன் குழந்தைகள்

இவ்விஷயத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள்:

1.குழந்தைக்கு 7 மணிக்கே இரவு உணவை தயார் செய்து கொடுங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்கவேண்டும்.

2.இரவு 9 மணிக்கு குழந்தையை தூங்க அனுமதியுங்கள்.

3.காலை ஃபஜ்ர் வேளையில்(5 to 6) குழந்தையை எழச் செய்யுங்கள்.

4.காலையில் சற்று நேரம் ஏதேனும் விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள்.

5.குழந்தை குளித்து முடித்து காலை உணவை முடிக்கும் வரை ஜோக்குகள், கதைகள், பாடல்கள் சொல்லலாம். இதனால் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

6.காலை உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா? என்பதை கவனியுங்கள்.

7.காலை உணவு குறித்து முந்தைய இரவே திட்டமிடுங்கள்.

8.வாரத்தில் 7 தினங்களும் 7 வகையான காலை உணவை தயாரியுங்கள்.

9.நேர மேலாண்மையை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.

பழ வகைகள்

பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம்.

காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும்

மதிய உணவு

காலை உணவைப் போலவே மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு தயாரிப்பதற்கு எளிதான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரியுங்கள். மதிய உணவில் குழந்தையின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மதிய உணவில் அடங்கியிருக்கிறதா? என்பதை கவனிக்கவேண்டும். மதிய உணவுடன் பழ வகை ஏதேனும் கொடுத்து அனுப்புங்கள்.

எளிதான வேலை என கருதி பலரும் குழந்தைகளுக்கு நூடில்ஸ் தயாரித்து பள்ளிக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் அக்குழந்தை நூடில்ஸ் குழந்தையாக மாறிவிடும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும். சோறு அதிகமாக கொடுப்பதை விட மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேருங்கள்.

ஆகவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களது காலை உணவில் அதிக கவனம் செலுத்துவோம். சோம்பலை கைவிட்டு, திட்டமிட்டு. ரசித்து சமைத்து அதனை அன்புடன் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். அவர்கள் சிறந்த பிள்ளைகளாக வளர கைக்கொடுங்கள்!

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!