Tue. Oct 26th, 2021

ஒக்டோபர் 15ம் திகதியிலிருந்து, மருத்துவரின் சிட்டையில்லாத கொரோனாப் பரிசோதனைகளிற்கு, கட்டணம் அறவிடப்படுவதுடன், தேசிய மருத்துவக் காப்புறுதியினால் இந்தக் கட்டணம் மீள வழங்கப்படவும் மாட்டாது என உறுதி செய்ப்பட்டுள்ளது.

கொரோனாப் பரிசோதனைகள் (antigénique, PCR) இதுவரை முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றது.

தொடர்ந்தும் மருத்துவரின் சிட்டையுடனான (prescription) கொரோனப் பரிசோதனைகளும் 18 வயதிற்குக் குறைந்தவர்களிற்கான கொரோனாப் பரிசோதனைகளும், கொரோனாத் தடுப்பு ஊசி போட்டவர்களிற்கான கொரோனாப் பரிசோதனைகளும் இலவசமாகவே தொடரும்.  

இந்தக் கட்டணம் யாரிற்கு அறவிடப்படும், எவ்வளவு அறவிடப்படும் என்ற மில்லியன் டொலர் கேள்வி இருந்தே வந்துள்ளது.

இது இப்பொழுது தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனாத் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் antigénique அல்லது  PCR சோதனைகள் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால், அவர்களிற்கு, மருத்துவரின் சிட்டை இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் இலவசமாகவே இருக்கும்.

தடுப்பு ஊசிகள் போட்டவர்களும், சில குறிப்பிட்ட நாடுகளிற்குப் போவதற்காக கட்டாயமாகக் கொரோனாப் பரிசோதனை செய்யவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இந்தப் பரிசோதனைக் கட்டணங்களும் இலவசமாகவே இருக்கும். அல்லது தேசிய மருத்துவக் காப்புறுதியினால் மீள வழங்கப்படும்.

ஆனால் கொரோனத் தடுப்பு ஊசிகள் போட மறுத்து, சுகாதார அனுமதிப்பத்திரமான passe sanitaire இனைப் புதுப்பிப்பதற்காக மட்டும் கொரோனாப் பரிசோதனை செய்பவர்கள் ஒக்டோபர் 15 இலிருந்து கட்டணம் செலுத்த வேண்டும்.

antigénique சோதனைகளை மருந்தககங்களில் செய்வதற்கு 25,01 யூரோக்களும், ஆய்வு கூடங்களில் செய்வதற்கு 22,02 யூரோக்களும் அறவிடப்படும்.

PCR சோதனைகளிற்கு 43,89 யூரோக்களும் அறவிடப்படும்.

இந்தத் தொகைகளே இது வரை மருந்தகங்களிற்கும் ஆய்வுகூடங்களிற்கும், இது வரை அரசினால் தேசிய மருத்துவக் காப்புறுதியினூடாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதே நேரம் ஏற்கனவே கட்டணங்களை வசூலிக்கும் சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தத் தொகையே பெறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

share

By Editor

error: Alert: Content is protected !!