RER C தொடருந்து சேவைகள் மீண்டும் சேவைக்கு வருவது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சேவைகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது ‘பத்து’ நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற விபத்தை அடுத்து இந்த போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. 1.30 மணி அளவில், Tolbiac-Masséna நோக்கி செல்லும் RER C தண்டவாளத்தில், திடீரென இராட்சத சீமெந்து தூண் உடைந்து விழுந்தது. பல தொன் எடை கொண்ட இந்த தூண் உடைந்து விழுந்ததற்குரிய காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
சேவைகள் தடைப்பட்டதை அடுத்து, உடனடியாக திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Freyssinet France எனும் நிறுனத்திடம் இந்த திருத்தப்பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர் Christian Lacroix இடம் ‘மீண்டும் சேவைகள் வழமைக்குத் திரும்பும் திகதி?’ குறித்து கேட்ட போது,
<<திருத்தப்பணிகள் மூன்று கட்டங்களாக இடம்பெற உள்ளன. முதலில் குறித்த தூண் வெட்டப்பட வேண்டும். பின்னர் அது அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். அதன் பின்னர் சேதமடைந்த தண்டவாளங்கள் சரிசெய்யப்பட வேண்டும். இதற்கு குறைந்தது ‘பத்து’ நாட்களாவது தேவை!>> என தெரிவித்தார்.