தலைநகர் பரிசில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Vélib வாடகை உந்துருளியில் இரு பெண்கள் பயணித்துள்ளனர். rue de Rome வீதியில் அவர்கள் பயணிக்கும் போது அவர்கள் பேருந்து ஒன்றை தாண்டிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
தாண்டிச் சென்ற அவர்கள் பேருந்துக்கும், முன்னால் சென்றுகொண்டிருந்த குளிர்சாத பெட்டி கொண்ட கனரக வாகனம் ஒன்றுக்கும் இடையே நுழைந்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் உந்துருளியில் இருந்து விழுந்தனர். அதில் ஒரு பெண் வீதியில் நீண்ட தூரம் உருண்டு சென்றுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து இரு பெண்களும் படுகாயமடைந்தனர். இருவரில் ஒருவர் 13 ஆம் வட்டாரத்தின் Pitié-Salpêtrière மருத்துவமனையிலும், இரண்டாமவர் 15 ஆம் வட்டாரத்தின் Georges Pompidou மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த இரு பெண்களும் 16 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் இருவரும் ஒரே உந்துருளியில் பயணித்துள்ளனர் எனவும், ஒரு Vélib உந்துருளியில் இருவர் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.