International
இலங்கை

அத்துரலிய ரத்ன தேரர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

அன்று தலதா மாளிகை தகர்க்கப்பட்டதற்காக நாம் இந்துக்கோயில்களை தகர்க்கவில்லை. இந்து மக்கள் வாழும் பகுதிகளில் புத்தர்சிலைகளும் வைக்கப்படாது. அவற்றை அகற்ற பொலிசார் தேவையில்லை. நாமே அகற்றுவோம் என அதிரடியாக அறிவித்துள்ளார் அத்துரலிய ரத்ன தேரர்.

இந்து- பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்றல் செயற்பாடுகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றும்போதே இப்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து, பௌத்த சமயங்கள் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன. அனைத்து இடங்களிலும் புத்தர் சிலை வைக்க வேண்டுமென்ற தேவையோ, எண்ணமோ எமக்கில்லை. இந்துக்கள் வாழும் இடங்களில் புத்தர் சிலை வைக்கப்படாது. அவ்வாறு வைக்கப்பட்டால், அதை அகற்ற பொலிசார் வர வேண்டுமென்றில்லை. நாமே அதை அகற்றுவோம்.

இந்து சமயத்தை பிரதிபலிக்கும் கீதாசாரம் போன்ற நூல்களை நாமும் கற்றுள்ளொம். மனதை அமைதிப்படுத்தும், மனிதர்களை நல்வழிப்படுத்தும் ஏனைய சமயங்கள் கூறும் விடயங்களை நாமும் பின்பற்றுகிறோம் (இதன்போது காயத்ரி மந்திரத்தை கூறினார்)

நாம் இனவாதிகளாக செயற்படவில்லை. சில அரசியல்தலைவர்கள்தான் அப்படி செயற்படுகிறார்கள். கறுப்பு ஜூலை வர காரணமானவர்களும் அவர்கள்தான். அன்று தலதா மாளிகை அழிக்கப்பட்டது. அதற்காக நாம் இந்துக்கோயில்களை அழிக்கவில்லை. ஆனால் இன்று சிலர் இனவாதத் கக்குகிறார்கள்.

ஏப்ரல் 21 தாக்குதல் இஸ்லாம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் கோபம் கொள்ளவில்லை. ஆனால் இனவாதிகள் பலர் இதற்கு உடந்தையாக உள்ளனர்.

கிழக்கு முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தொழில்நுட்பக்கல்லூரி அமைப்பதாக கூறி, அரபுக்கல்லூரியை தனியாக அமைத்தார். இதற்காக 100 மில்லியன் டொலரை சவுதியில் இருந்து பெற்றுள்ளார். இப்படியான இனவாத செயற்பாடுகளிற்கு நாம் இடமளியோம். அவர் அமைத்த அந்த கல்லூரி அரசின் கீழ் மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்ப கல்லூரியாக மாறும். அதற்காக எந்த அரசுடனும் இணைந்து நாம் செய்வோம். கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முறையற்ற விதத்தில் செயற்பட்டதற்கு கூட்டமைப்பும் ஒருவிதத்தில் காரணம். அரசியல்தீர்வு என கூறிக்கொண்டு, அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயங்களை கவனிக்கவில்லை. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அதைப்பற்றி கூட்டமைப்பு பேசவில்லை.

தமிழ், சிங்களவர்கள் வியாபாரத்துறையில், உற்பத்திதுறையில் முன்னிலைவகிக்க வேண்டும்.

குருநாகல், மட்டக்களப்பில் இளம் குடும்பபெண்கள் முதல்குழந்தை பெற்றதும், அடுத்த குழந்தை கருத்தரிக்காத விதத்தில் சிகிச்சை வழங்கப்பட்டதை நீங்கள் அறவீர்கள். ஆசிரியர் நியமனத்தில் 80 வீத முஸ்லிம்களையே ஹிஸ்புல்லா நியமித்தார். இப்படியான இனவாத செயற்பாடுகள் இனியும் தொடர அனுமதிக்ககூடாது. அனைத்து அரசியல் தரப்பும் எம்முடன் கைகோருங்கள். நாம் இணைந்து செயற்படுவோம். ரிஷாத் போன்ற அரசியல் தலைவர்களிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!